“என் மகன் ஜெயிச்சிட்டான்.. ஆரத்தி எடுத்து வரவேற்பேன்” – CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம் | I will Bring Him Home and Perform Aarti: CJP founder Abhijeet Dipke’s Mother’s Emotional Reaction

Spread the love

India

oi-Vignesh Selvaraj

மும்பை: தனது மகனை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், நீண்ட நாட்கள் கழித்து அபிஜித் தீப்கேவை சந்திக்கப் போவதாகவும், ஆரத்தி எடுத்து வரவேற்பேன் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் தாயார் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 20 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் மற்றும் இளைஞர்கள் பேரணியாகச் சென்றனர்.

I will Bring Him Home and Perform Aarti CJP founder Abhijeet Dipke s Mother s Emotional Reaction

இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடுத்தன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி கட்சியினரிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தனர். அப்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து 3வது கட்டமாக சிஜேபி கட்சியினர் மத்திய அமைச்சர் நட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இளைஞர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்படுவதகா அறிவிக்கப்பட்டது.

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே பேசுகையில், “நாம் சாதித்துவிட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். அரசின் முன்பாக நாம் தலை குனியாவிட்டால் எவரையும் ராஜினாமா செய்ய வைக்க முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. அமைதியான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. அமைதியான முறையில் போராடினால் அது வீணாகாது. கரப்பான்பூச்சிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஜனநாயகம் வெற்றி பெற்றுவிட்டது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகர் நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அபீஜித்தின் தாய் அனிதா தீப்கே, “அவனை சீக்கிரம் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளேன். அவன் வரவில்லை என்றால், நாங்களே சென்று அவனை அழைத்து வருவோம். அவனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து அவனுக்கு ஆரத்தி எடுக்கவேண்டும்.

கடைசியாக அவன் இங்கு வந்தபோது, ‘நான் ஒன்றும் பெரிய விஐபி இல்லையே’ எனக் கூறி என்னை ஆரத்தி எடுக்க அனுமதிக்கவில்லை. இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவனது நேர்மை வென்றுள்ளது. இளைஞர்களின் ஆதரவு அவனுக்கு உறுதுணையாக இருந்ததால், இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுள்ளான்.

நான் அவனை நினைத்து பல இரவுகள் தூக்கமில்லாமல் கவலையுடன் இருந்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் ஏதேனும் அசம்பாவித வீடியோவை பார்த்துவிடுவோமோ என்ற பயத்தில் செல்போனை பார்க்கவே பயந்தேன். அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்பதைத் தெரிந்துகொள்ள உடனே அவனுடைய நண்பர்களுக்கு அழைப்பேன். அவனது நண்பர்களே எனக்கு எப்போது ஆறுதல் கூறுவார்கள்.

போராட்டம் தொடங்கியபோது கவலையால் அழுதேன். இன்று என் கண்களில் வருவது ஆனந்தக் கண்ணீர். இந்தப் போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உழைத்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியது இளைஞர்களின் வெற்றி” என்று தெரிவித்தார்.

அபிஜித்தின் தந்தை பகவான்ராவ் தீப்கே செய்தியாளர்களிடம் பேகையில், “அவன் அரசியலில் இறங்கியபோது நாங்கள் அனைவரும் கவலைப்பட்டோம். என் விருப்பத்திற்கு மாறாகவே அவன் அதில் ஈடுபட்டான். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்த அரசியல் பின்னணியும் இல்லை. அவன் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நாங்கள் இருந்தோம். அதனால், ஜூன் மாதம் அமெரிக்காவில் இருந்து அவனைத் இந்தியா திரும்பவேண்டாம் என்று நாங்கள் தெரிவித்தோம்.

ஆரம்பத்தில் பயத்தால் வீட்டை விட்டு வெளியேறி கொங்கன் பகுதியில் தங்கியிருந்தோம். எங்கள் குடும்பமே கடும் மன அழுத்தத்தில் இருந்தோம். எங்களுக்கு தாக்குதல் அச்சுறுத்தல்களும் வந்தன. நாங்கள் மிகவும் பலவீனமடைந்து, எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்தோம். ஒரு நாளைக்கு ஒரு ரொட்டி மட்டுமே சாப்பிட்டோம். எங்களால் நிம்மதியாகச் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை.

போராட்டத்தின் போது அபிஜித் 2 முறை தாக்கப்பட்டான். ஜூலை 20 அன்று அவனது மைக்கை ஒரு காவலர் பிடுங்கியதைப் பார்க்கையில் ‘பார்டர்’ திரைப்படத்தின் காட்சி நினைவுக்கு வந்தது. காவல்துறையினரிடம் அவன் சிக்கிக் கொண்டால் உயிர் பிழைக்கமாட்டான் என்றும் தோன்றியது. கடவுளின் அருளால் இப்போது அவன் பாதுகாப்பாக இருக்கிறான். இப்போது வீட்டிற்கு வந்து அவன் எங்களுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *