ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.16) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய சுனில் நரேன் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகுப் பேசிய சுனில் நரேன், “இந்த விருது கடின உழைப்பிற்குக் கிடைத்திருக்கிறது. வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகத் தயாராகி வருகிறார்கள்.

நாங்கள் மைதானத்தில் கடுமையாக உழைத்து வருகிறோம், அதற்கான பலன்தான் இப்போது தெரிகிறது. இந்தத் தொடர் நமக்கு என்ன மாதிரியான சூழ்நிலைகளை வைத்திருந்தாலும், நாம் இதேபோல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு போட்டியும் ஒரு புதிய சவாலைக் கொண்டு வரும், அந்தச் சவாலை முறியடித்து வெற்றி பெறுவதற்கான முயற்சிகளைத்தான் நாங்கள் செய்கிறோம்.
நேற்றும் அந்தச் சவால் இருந்தது, அடுத்த போட்டியில் வேறு மாதிரி இருக்கலாம், ஆனால் நமக்கு முன்னால் இருக்கும் சூழ்நிலைகளைச் சமாளித்து வெற்றி பெற முயல்வதுதான் முக்கியம்.
அதிகமாக யோசிக்காமல் இருக்க வேண்டும். நாம் விஷயங்களை அதிகமாக யோசித்தால், அது வழக்கத்தை விடக் கொஞ்சம் கடினமாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு சீனியர் வீரராக இருப்பதும், என்னுடைய 200-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்குத் தேவையான திறமையையும், உடல்நலத்தையும், வலிமையையும் கடவுள் எனக்குக் கொடுத்திருப்பதும் ஒரு ஆசீர்வாதம் என்று நான் நினைக்கிறேன்.
இது நீண்ட தூரப் பயணம், இந்தப் பயணம் இன்னும் தொடர்கிறது. எனவே, என்னால் முடிந்தவரை நீண்ட காலம் விளையாடி, இதேபோன்ற சிறந்த ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.