திருவாரூர், வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73) இவரது மனைவி ஜெயா (65). இவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் பகுதியில், சங்கர்ராமன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் அகற்றும் வாகனம், சைக்கிள் மீது மோதியது.

இதில் சங்கர்ராமன் தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்து பலியானார். இந்நிலையில் சங்கர்ராமன் விபத்தில் சிக்கிய தகவல் அவரது மனைவி ஜெயாவுக்கு சொல்லப்பட, விபத்து நடந்த இடத்துக்கு பதறியடித்து ஓடி வந்துள்ளார். இதையடுத்து சாலையில் கிடந்த கணவரைப் பார்த்துக் கதறினார். கணவர் இறந்துவிட்டார் என்பதை அவர் மனம் ஏற்கவில்லை. சங்கர்ராமன் முகத்தில் மொய்த்த ஈக்களை தனது சேலையால் விரட்டினார்.