`எஸ்.பி.வேலுமணியை அதிமுக பொதுச்செயலாளராக்கு சாமி' – குண்டம் இறங்கி வேண்டிய கோவை நிர்வாகி!

Spread the love

அ.தி.மு.க-விற்குள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணியை அக்கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கோவை குறிச்சி பகுதிச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான செந்தில்குமார் என்பவர், குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோயிலில் எஸ்.பி.வேலுமணி பேனருடன் குண்டம் இறங்கி வேண்டினார்.

இது குறித்து நம்மிடம் பேசிய செந்தில்குமார், “அ.தி.மு.க தற்போது இருக்கும் நிலையில், நல்ல ஆக்கபூர்வமான இளைஞரான எஸ்.பி.வேலுமணி போன்ற ஒருவர் பொதுச்செயலாளராக வந்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும். தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறோம். கட்சியில் இருந்த பல தலைவர்கள் சென்று விட்டார்கள். தொண்டர்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக ஏதொவொரு விபத்து போல வந்துவிட்டார். அதேமாதிரி ஒரு விபத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். இவரை யாரும் விரும்பி ஏற்றுக் கொள்வது போல தெரியவில்லை.

செந்தில்குமார்
செந்தில்குமார்

தலைமை மாறினால் தான் ஜெயலலிதா சொன்னதுபோல, இந்தக் கட்சி நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழும். இல்லையெனில் கட்சி இன்னும் மோசமான நிலைக்குப் போகும். இதனால் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டுமென குறிச்சி மாகாளியம்மன் கோயிலில் சாமியிடம் வேண்டுதல் வைத்துள்ளேன். இது நடந்தால்தான் கட்சி ஆரோக்கியமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பவர்களை கட்சியில் இருந்து நீக்குவது பிரச்னைக்கு தீர்வு அல்ல.

எனது கருத்தை பதிவு செய்ய எனக்கு உரிமை உண்டு. நாற்பது ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால், அவர் ஜீரோவில்தான் இருக்கிறார். துணிவுமிக்க தலைவர் கட்சிக்குத் தேவை. கட்சி தொடர்ந்து தோல்வி அடைவது குறித்தோ, கட்சியில் இருந்து விலகி செல்பவர்கள் குறித்தோ எடப்பாடி பழனிசாமி கவலைப்படுவதில்லை. அவர்களை தக்கவைக்க எந்த முனைப்பும் அவர் காட்டுவதில்லை. ஆளே இல்லாமல் கட்சியை எப்படி நடத்த முடியும்? நான் கொள்கைக்காக கட்சியில் இருக்கிறேன். என்னை பதவியில் இருந்து நீக்கினாலும், அடிப்படை உறுப்பினராக கட்சியில் தொடர்ந்து பயணிப்பேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *