அவர் பேசுகையில், “நானும் என்னுடைய நண்பர்களான ஜெயச்சந்திரன், பாலச்சந்தர் ஆகிய மூவரும் சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தோம். நாங்கள் கல்லூரியில் படிக்கும்போதே அனிமேஷன் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டு, 2001 முதல் 2005 வரை அனிமேஷன் துறையில் பணிபுரிந்தோம்.
பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகு, சொந்தமாக 2008-ல் ‘ஹைபிரிட் ஸ்டுடியோ’ நிறுவனத்தைத் தொடங்கினோம். அதன் மூலம் திரைப்படங்களுக்குப் புதிய தொழில்நுட்ப உதவியுடன் பிளாஷ்பேக் கதையை அனிமேஷன் மூலம் சொல்லும் டிரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கினோம். ‘மூடர் கூடம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களில் அனிமேஷன் & கிராஃபிக்ஸ் பணிகளைச் செய்தோம்.
அதன் மூலம் கிடைத்த அனுபவத்தினாலும் ஏஐ போன்ற தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் அதனை வைத்து படம் எடுக்கலாம் என யோசித்து செய்ததுதான் இந்த ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ குறும்படம்” என்றவர், “உலகளாவிய போர்களை எதிர்த்தும், மனிதநேயத்தை வலியுறுத்தும் விதமாகவும், சிறிய பட்ஜெட்டில் மக்களிடம் இது குறித்த எண்ணத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.
போர்களில் முக்கியமாக குழந்தைகளும் பெண்களும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களுடைய பார்வையில் இருந்தே இந்தக் குறும்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ரஷ்யா – உக்ரைன் போரை மையமாகக் கொண்டு, போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் வலியைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட குறும்படமே “விங்ஸ் ஆன் ஃபயர்”.