ஏதே பட்டாசு வெடிச்சா நோய் குணமாகுமா? சர்ச்சையான நிலையில் SORRY கேட்ட பா.ஜ.க MLA ! – Kumudam

Spread the love

பட்டாசு வெடிப்பதால் பல நோய்கள் குணமாகும் எனக் கூறிய பாஜக பெண் எம்எல்ஏ பாபியா அதிகாரியின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தனது கருத்துக்கு விளக்கம் அளித்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

காளி பூஜையில் சர்ச்சை பேச்சு

மேற்கு வங்க மாநிலம் டோலிகஞ்ச் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் பாபியா அதிகாரி. கடந்த நவம்பர் 7-ம் தேதி தனது தொகுதியில் நடைபெற்ற காளி பூஜை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அவர், பட்டாசு வெடிப்பது குறித்து பேசினார்.

அப்போது, “முதலமைச்சர் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளார். பட்டாசுகள் இல்லாமல் காளி பூஜை எப்படி முழுமையடையும்? நாங்கள் நிச்சயமாக பட்டாசுகளை வெடிப்போம். அதே நேரத்தில் காவல்துறையின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவோம்” என்று தெரிவித்தார்.

பட்டாசு வெடித்தால் நோய்கள் குணமாகுமா?

இதைத்தொடர்ந்து பேசிய அவர், பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் பல நோய்கள் குணமாகும் என்பதை நீங்கள் காண்பீர்கள் எனக் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக, காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என்ற கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பாபியா அதிகாரியின் பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து, கிண்டல் செய்து வருகின்றனர்.

தெரியாமல் சொல்லிவிட்டேன்… மன்னிப்பு கேட்ட பாபியா அதிகாரி!

இந்த விவகாரம் பெரும் விவாதமாக மாறிய நிலையில், தனது பேச்சு குறித்து பாபியா அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இது நமது முன்னோர்கள் கூறிய பாரம்பரிய நம்பிக்கையாகும். தீபம் ஏற்றுவதும், யாகம் செய்வதும் சமூகத்தில் உள்ள தீமைகளை அகற்றும் என்பது பழங்கால நம்பிக்கை.

ஆனால் தற்போது அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற கருத்துகள் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமானவை அல்ல என்பதை உணர்கிறோம்.

எனவே, என்னுடைய பேச்சால் யாராவது மனவேதனை அடைந்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நான் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெறவும் தயாராக இருக்கிறோம். அவற்றை திரும்பப் பெற்றுக்கொண்டதாகவே கருதிக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

வைரலான பேச்சு… வலைதளங்களில் ட்ரோல்!

பட்டாசு வெடித்தால் நோய்கள் குணமாகும் என்ற பாஜக எம்எல்ஏவின் கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவரது பேச்சை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்கள் மற்றும் விமர்சனங்களைப் பதிவிட்டு வரும் நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாபியா அதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *