International
oi-Rajkumar R
பாரிஸ்: உலகின் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா மாறியுள்ள நிலையில், அங்கு தற்போது தாக்கியுள்ள கடுமையான வெப்ப அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் ஜூன் 28 வரை வெறும் 8 நாட்களிலேயே சுமார் 1,300 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக கோடைகால வெப்பம் ஐரோப்பாவில் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே நிலைமை கட்டுக்கடங்காமல் போயுள்ளது.
பொதுவாக ஜூன் மாதம் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மிதமான கோடைக்காலமாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட 5 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வாளர்களின் கருத்துப்படி, வட ஆப்பிரிக்காவில் இருந்து மிகவும் சூடான காற்று ஐரோப்பாவை நோக்கி தொடர்ந்து வீசுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நீண்ட நாட்களாக நிலைத்திருக்கும் உயர் காற்றழுத்த மண்டலம் (High Pressure System) கூறப்படுகிறது.

ஐரோப்பா வெப்ப அலை
இந்த உயர்காற்றழுத்தம் காரணமாக மேகங்கள் உருவாகாமல், நேரடி சூரிய வெப்பம் தரையை அதிகமாக தாக்குகிறது. அதேநேரத்தில், சூடான காற்று வெளியேறாமல் சிக்கிக் கொள்வதால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவே தற்போது ஐரோப்பா முழுவதும் கடுமையான வெப்ப அலையை உருவாக்கியுள்ளது.
ஏன் பாதிப்பு அதிகம்?
உலகின் பல பகுதிகளிலும் வெப்ப அலை ஏற்பட்டாலும், ஐரோப்பாவில் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அங்கு பெரும்பாலான வீடுகள் குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டவை. அதாவது வெப்பத்தை உள்ளே தக்கவைத்துக் கொள்ளும் வகையில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளதால், கோடைக்காலத்தில் அந்த வீடுகளே “வெப்ப அறைகளாக” மாறுகின்றன.
மிகப்பெரிய ஆபத்து
மேலும், ஐரோப்பாவில் முதியோர் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் முதியவர்கள், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு வெப்பம் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனுடன், இரவு நேரங்களிலும் வெப்பநிலை குறையாததால் உடலுக்கு ஓய்வு கிடைக்காமல், வெப்ப அழுத்தம் (Heat Stress) அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
பள்ளிகள் மூடல்
கடுமையான வெப்பத்தால் பல நாடுகளில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற விளையாட்டு மற்றும் பொதுநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக வெப்பம் காரணமாக ரயில் தண்டவாளங்கள் விரிவடையும் அபாயம் இருப்பதால் சில இடங்களில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் வெப்ப பாதிப்பால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
வெப்பமடையும் ஐரோப்பா
கடந்த 30 ஆண்டுகளில் உலகிலேயே மிக வேகமாக வெப்பநிலை உயர்ந்துள்ள கண்டம் ஐரோப்பாதான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் சராசரி வெப்பநிலை 10 வருடத்திற்கு 0.27 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் அது 0.56 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இது உலக சராசரியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது, உலக சராசரி வெப்பநிலை சுமார் 1.4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஆனால் ஐரோப்பாவில் அது ஏற்கனவே 2.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஆர்க்டிக் பகுதிக்கு அடுத்தபடியாக வேகமாக வெப்பமடையும் பிராந்தியமாக தற்போது ஐரோப்பா உள்ளது.
காலநிலை மாற்றம்
காலநிலை ஆய்வாளர்கள் கூறுவதாவது, புவி வெப்பமயமாதலே இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் என்பதாகும். குளிர்காலங்களில் பனி பொழிவு குறைந்து வருவதால், சூரிய ஒளியை பிரதிபலிக்கும் பனிப்பரப்பு சுருங்கி வருகிறது. இதனால் நிலப்பரப்பு அதிக வெப்பத்தை உறிஞ்சுகிறது. அதேபோல், காற்று மாசுபாடு குறைந்ததால் வளிமண்டலத்தில் சூரிய ஒளியை தடுக்கக்கூடிய துகள்களின் அளவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அதிக சூரிய கதிர்வீச்சு நேரடியாக பூமியை அடைந்து வெப்பநிலையை மேலும் உயர்த்துகிறது.
ஆபத்து அதிகரிக்கும்
கடந்த 2022 முதல் தற்போது வரை ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற கடுமையான வெப்ப அலைகள் மேலும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பா பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டக்கூடும் என்றும், அதனால் மனித உயிர்கள் மட்டுமல்லாமல் வேளாண்மை, குடிநீர், மின்சாரம் மற்றும் பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


