சென்னையின் பிரபல ஷூட்டிங் ஸ்பாட்டான ஏ.ஆர்.எஸ். கார்டன் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சட்ட அறிவிப்பு பலகை சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
“இந்த நிலம் விற்பனைக்கல்ல, தவிர இந்த நிலம் தொடர்பாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையிலுள்ளன’ என்பதுதான் அந்த அறிவிப்பு பலகையில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள்.
ஆண்டு முழுக்க சினிமா, டிவி சிரியல்கள் பலவற்றின் ஷூட்டிங் நடந்து கொண்டே இருக்கும் இந்த இடம் குறித்து சினிமா சீனியர் நடிகர் ஒருவரிடம் பேசினோம்.
”சென்னையில் வடபழனி டு போரூர் செல்லும் வழியில் வளசரவாக்கத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஸ்டூடியோ, திரைப்பட நடிகைகள் அம்பிகா, ராதா குடும்பத்துக்குச் சொந்தமானது.
அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் தாய் சரசம்மா ஆகிய மூவரையும் குறிக்கும் விதத்தில் தான் ஏ.ஆர்.எஸ் என பெயரிடப்பட்டது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது இந்த ஸ்டூடியோவைத் திறந்து வைத்தார்.
அப்போது முதல் ஏராளாமான படங்கள் மற்றும் டிவி சீரியல்களின் ஷூட்டிங் இங்கு நடைபெற்று வருகிறது.
எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாலேயே அவர் இவர்களுக்குத் தானமாக தந்தார் எனக் கிளம்பிய புரளிகளும் இப்போது வரை நின்றபாடில்லை.