ஐந்து வண்ணங்களில் அருள்பாலிக்கும் பஞ்சவர்ணேஸ்வரர்! திருநல்லூரின் அதிசய சிவஸ்தலம்… – Kumudam

Spread the love

நீங்கள் எத்தனையோ கோயில்களுக்குச் சென்று சிவபெருமானைத் தரி சித்திருக்கலாம். விதவிதமான லிங்க ரூபமாகக் காட்சி தரும் அவரை எங்கேயாவது வண்ணத் திருவடிவினராகத் தரிசித்தது உண்டா? அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து வண்ணங்களில் அருளும் இறைவனைக் கண்டது உண்டா? இதோ, அப்படி ஓர் அற்புதமான, வித்தியாசமான திருக்கோயில்தான், நாம் இப்போது தரிசிக்க இருப்பது. பொன்னார் மேனியனான ஈசன்,ஐவண்ணப் பெருமானாக அருளும் திருத்தலம்.

வாழ்வில் வண்ணங்கள் மிகவும் முக்கியத்துவமானவை. வண்ணங்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன. கண்ணுக்குக் குளுமை அளிப்பதால் மட்டுமல்ல, எண்ணத்தையே மாற்றக்கூடிய வல்லமை மிக்கவை வண்ணங்கள் என்பது இன்றைய அறிவியலாரும் ஏற்றுக்கொண்ட உண்மை. நவகோள் முதல் நவரத்தினம் வரை ஒவ்வொன்றுக்கும் ஒரு வண்ணம் உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தரக்கூடியவை என்பதெல்லாம் ஆன்மிகபூர்வ மானவை, அறிவுபூர்வமானவை.

பஞ்சவர்ணேஸ்வரராக இறைவன் அருளும் அந்த விசேஷத் திருத்தலம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருநல்லூர். பஞ்சபூதங்களும் என்னுள் அடக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இறைவன் இங்கே பஞ்சபூதங்களின் வண்ணங்களைத் தன்னில் காட்டி தரிசனம் அளிக்கிறார். தினமும் காலை முதல் மாலை வரை ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறமாறும் ஈசனின் திருநாமம், பஞ்சவர்ணேஸ்வரர். அமர்நீதி நாயனாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறைவன் முக்தி அளித்த திருத்தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. அமர்நீதியார், அவரது மனைவியின் பிரதிமைகள் கற்சிலையாகவும், செப்புத் திருமேனிகளாகவும் இங்கே இருக்கின்றன.

கயிலை மலையிலிருந்து வாயுவால் பெயர்த்து ஏறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றுதான் இந்தத் தலம். மற்றது ஆவூர். இத்தலம், சந்திரகிரி என்றும் வழங்கப்படுகின்றது. திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டிய திருத்தலம் இந்தத் தலம். அகத்தியருக்கு திருமணக் கோலக் காட்சி தந்த இடமும் இதுவே.
குடமுருட்டி ஆற்றின் தென் பகுதியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் விஸ்தாரமாக அமைந்திருக்கிறது. ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. கருவறையின் விமானம் பதினான்கு அடி உயரத்தில் அமைந்திருக்கின்றன. இவ்விமானம் கட்டுமலை மீது அமைந்திருக்கின்றது. கோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் காட்சி தர, அடுத்து பலிபீடம், கொடிமரம் இடபதேவர் வணங்கிக் கொள்கின்றோம்.

அமர்நீதி நாயனார் வரலாற்றில் முக்கியத் தொடர்புடையது, நான்கு கால்களுடன் அமையப் பெற்ற துலா. அதாவது, தராசு மண்டபம். இங்கே அமர்நீதியாரும் அவரின் குடும்பத்தினரும் அமர்ந்த துலா இருப்பதைக் காணலாம். அமர்நீதி நாயனாரின் வரலாறு அங்கு காட்சியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நந்தவனத்தை அடுத்து, அஷ்டபூஜ மகா காளி கோயில் அமைந்திருக்கின்றது.

இத்தலத்தில் சோமஸ்கந்த மூர்த்தி தனியாகக் கோயில் கொண்டு அமர்ந்திருக்கின்றார். இங்கு அப்பர், சுந்தரர், சம்பந்தர், குந்திதேவி ஆகியோரின் சிலை வடிவங்களைக் காணலாம். பதினான்கு அடி உயரத்துடன் கூடிய சுட்டுமலையில் உள்ள சன்னதியில் கல்யாண சுந்தரேஸ்வரர் கிழக்கு முகமாக இருக்கிறார். சுவாமி சன்னதியின் வடகிழக்கில் தனிக் கோயிலில் அம்பாள் கிரிசுந்தரி, தெற்குநோக்கிய திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

கோயிலில் எதிரில் உள்ள திருக்குளம் பிரம்மதேவனால் உருவாக்கப்பட்டது. இக்குளத்தின் கீழ் திசையில் ரிக் தென் திசையில் யஜூர் மேற்கு திசையில் சாமம், வட திசையில் அதர்வண வேதங்களையும் குளத்தின் நடுவில் சப்தகோடி மஹா மந்திரங்களையும், பதினெண் புராணங்களையும் வைத்து தோற்றுவிக்கப்பட்டது என்பதால், மிகப் புனிதமான திருக்குளமாசுப் போற்றப் படுவதுடன், கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு இணையானதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், மகம் பிறந்தது நல்லூரில், மகர் மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்று கூறி மாசி மக நாளின்போது இக்குளத்தில்  வந்து தீர்த்தமாடுவர்.
பொதுவாக, வைணவ ஆலயங்களில்தான் திருமாலின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை பக்தர்களின் தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இவ்வழக்கம் இல்லை. ஆனால், இந்தத் திருநல்லூர் திருத்தலத்தில் சிவனடி திருவடி பதிக்கப்பெற்று முடி ஒன்றை இத்தல தரிசனத்திற்கு வருகின்றவர்களுக்கு சூட்டப்படுகிறது. அதாவது. ஈசன் திருவடியைத் தலையில் ஏற்றுக் கொள்ளும் ஐதிகமான இந்த வழக்கம் இந்த ஆலயத்தில் மட்டுமே உள்ளது.

இதற்குக் காரணம், அப்பர் சுவாமிகள் திருச்சத்தி முற்றத்திற்கு வந்து, எமன் தன்னைக் கொண்டு போகும் முன் தன் தலைமீது திருவடியைச் சூட்டி அருளுமாறு இறைவனிடம் வேண்டினார். அதற்கு ஈசன், நீ நல்லூருக்கு வா’ எனக் கட்டளை இட்டார். அதன்படி அப்பர் நல்லூருக்கு வந்து சிவனைப் பணிந்து, இறைவன் திருவடி சூட்டப் பெற்றார். இந்த அரிய நிகழ்ச்சியை விளக்கும் விதமாகவே இந்தத் திருவடி இங்கு பதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

பிருங்கி முனிவர் வண்டு வடிவம்கொண்டு வழிபட்டதால், சிவலிங்கத் திருமேனியில் துளைகள் காணப்படுகின்றன. சதுர ஆவுடையாரில் உள்ள லிங்கத்திருமேனிக்குப் பின்னால் அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் இருக்கிறது. இரு பக்கத்தில் திருமாலும் பிரம்மனும் காட்சிதர, அகத்தியர் வழிபடும் நிலையில் இருக்கின்றார். இங்கிருக்கும் மூலவரின் பக்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கங்கள் தனிச் சிறப்பானதாக இருப்பதைக் காணலாம். அதற்கும் ஒரு புராணம் உண்டு.

அமர்நீதி நாயனார், சிவனடி யார்களுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்த சமயம், அவரைச் சோதிக்க எண்ணினார், சிவபெருமான். மறைநீதி ஓதும் சிவத்தொண்டர் போல் வேடம் தாங்கி, கையில் தண்டும் இடையில் கோவணமுமாக  நாயனார் இல்லத்தை அடைந்தார். இல்லத்திற்கு வந்த அடியாரை வரவேற்ற நாயனார். அமுதுண்ண வேண்டினார். நீராடிய பின் விருந்துக்கு வருவதாகச் சொன்ன இறைவன், தன் கோவணம் ஒன்றை பத்திரமாக வைத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் தன் திருவிளை யாடலால் கோவணத்தை மறையச் செய்துவிட்டு, நீராடித் திரும்புவது போல் வந்து நாடகத்தைத் தொடங்கினார். குளித்துவிட்டு வந்தவர். அமர்நீதி நாயனாரிடம் கோவணத்தைக் கேட்டார். அமர்நீதி நாயனாரோ வீடு முழுவதும் தேட கோவணம் காணாமற் போயிருந்தது.

விளையாடுபவர் இறைவன் என்று அறியாமல் அமர்நீதியார், பதைபதைத்தார். கோவண மறைவுக்கு மன்னிக்க வேண்டினார், நாயனார். இறைவனான அடியார் கோவணத்திற்கு ஈடாக வேறொன்றைக் கேட்க, நாயனாரும் சம்மதித்தார். துலாவில் ஒரு தட்டில் கோவணத்தை வைக்க மறுதட்டில் கோவணத்துக்கு எதை வைத்தாலும் ஈடாகாமல் போகவே, கடைசியில் தன் குடும்பத்தோடு தராசில் அமர்ந்தார், நாயனார். நாயனாரின் பக்தியை மெச்சி அவர்களுக்கு முக்தியை அளித்துத் தன் பாதம் சேர்த்துக் கொண்டார். இத்தலத்து இறைவன்.

சோழநாட்டின் காவிரி தென்கரையில் அமையப்பெற்றுள்ள நூற்று இருபத்தெட்டு தலங்களுள் இருபதாவதாகப் போற்றப் பெறுகின்றது. இது கோட்செங் கண்ணனாரால் எழுப்பப்பட்ட மாடக் கோயிலாகும். சிவ ஆகம முறையில் நான்கு கால பூஜைகள் இங்கே நடக்கின்றன. இந்த ஆலயத்திற்கு வந்து பஞ்ச வர்ணேஸ்வரரைக் கண்டு, அமர்நீதி நாயனாருக்கு இறைவன் அருளியது போல் நமக்கும் இந்த இறைவன் பக்திக்கு மெச்சி தன்னை தன் பாதத்தில் பக்தியுடன் வருபவர்க்கு அவர்கள் கேட்டதைக் கேட்டபடி கொடுக்கும் கருணாமூர்த்தியாக அமர்ந்திருக்கும் கோலத்தை நாமும் கண்டு அவரது அருளாசியைப் பெற்று நம் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகின்றேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *