ஒருமுறை தரிசித்தால் ஓராயிரம் பலன்கள்…காக்கும் தெய்வம் காளிகாம்பாள்! – Kumudam

Spread the love

ஆலய உலா..! – வி.ராம்ஜி

அம்மாவுக்கு இணையான அன்பும் ஆதரவும் தருபவர்களைச் சொல்லவே முடியாதுதானே. ‘என்னதான் இருந்தாலும் என் அம்மா மாதிரி வருமா?’ என்று சொல்லாதவர்களே இல்லை. எல்லாத் தருணங்களிலும் அம்மாவை நினைத்து, அம்மாவைச் சொல்லி, அம்மாவைப் பேசி, அம்மாவின் பெருமைகளை எண்ணத்தால் அசைபோட்டுக் கொண்டிருக்கிறவர்கள்தானே நாம்!அம்மா என்பவள் எப்போதுமே, எல்லோருக்குமே, எல்லா தருணங்களிலுமே அப்படித்தான்!

ஒரு வீட்டை நிர்வகிக்கிற பெரும் பொறுப்பு அவளுக்குத்தான் இருக்கிறது. அவளின்றி அங்கே ஓர் அணுவும் அசைவதே இல்லை. ஏனென்றால், அம்மா என்பவள் சக்தி மிக்கவள். அம்மா என்பவள் அம்மாவாக மட்டுமே இருப்பதில்லை.

வீட்டைக் கவனிப்பதில் நிர்வாகி, நம்மைக் கவனிப்பதில் அன்னை. குடும்பத்தை மேம்படுத்துவதில் மிகப்பெரிய முதலாளியாக, நல்ல விஷயங்களை நமக்குள் விதைப்பதில் ஆசானாகத் திகழ்பவள் என பல வடிவங்களை ரூபங்களைக் கொண்டவள்! பெண் தெய்வங்களும் இப்படித்தான்!

நதியைப் போல ஓடிக்கொண்டிருப்பவள் அன்னை. அதனால்தான் நதிகளுக்கெல்லாம் பெண்ணின் பெயரைச் சூட்டியிருக்கிறது புராணம். எல்லாப் பெண்களிலும் அம்மாவைத் தேடுகிறது மனம். ஓர் ஆண் ததும்பத் ததும்ப அன்பு காட்டினால், அவரை அம்மாவாகவே, அன்னையாகவே., தாயாராகவே நினைத்துப் பூரித்துப் போகிறோம். அதனால்தான், அப்படிப்பட்டவர்களை தாயுமானவன் என்று போற்றுகிறோம்.

இங்கே… அம்மா என்பவள் எல்லாமாகவும் இருக்கிறாள். தாய் என்பவள் எல்லா வடிவங்களையும் கொண்டிருக்கிறாள். அவள் சக்தி மிக்கவள் என்பதால்தான் இவை அனைத்தும் சாத்தியமாகிறது. ஏனெனில், அவள் சக்தியின் பிரதிபிம்பம். சக்தியின் இன்னொரு சாயல், சக்தியின் மற்றொரு வடிவம். அவ்வளவு ஏன்… சக்தியே அவள்தான்! சொல்லப்போனால், பக்தைக்கு ஒரு தாயைப் போல் அருள்புரிந்த சிவபெருமானை, தாயுமானவ சுவாமி என்றுதான் கொண்டாடுகிறோம்.

சக்தியின்றி இங்கே எதுவும் சாத்தியமில்லை. சக்தி என்பது ஓர் தேவதை.அப்படி ஓர் தேவதையில் இருந்து கிளைத்துக் கிளைத்து, முளைத்து, வேர்விட்டு விஸ்வரூபமெடுத்திருக்கிற தேவதைகள் அனைவருமே சக்திகள்தான்.

உலகாளும் பராசக்திகள்தான். உலகை உய்விக்கவும் உன்னதப்படுத்தவுமாக அவர்களின் சக்தியானது, அன்பாய், ஆதுரமாய், கனிவாய், கருணையாய் வரங்களை வழங்கிக் கொண்டே இருக்கின்றன நமக்கு!

சக்தியின் வடிவங்களும் ரூபங்களும் வேறு வேறு. ஆனால் சக்தியின் குணமானது ஒன்றே ஒன்றுதான். அது… படைத்தவர்களைக் காத்தல். யாரைப் படைத்தார்கள். நம்மையெல்லாம் படைத்திருக்கிறார்கள். அப்படியெனில்… நம்மைப் படைத்தவர்கள் என்றால், அவர்கள் நமக்கு அன்னை அல்லவா. ஆமாம்… அன்னைதான். அம்மாதான். அம்பாள்தான் நமக்கான முதல் அன்னை, தாய், அம்மா எல்லாமே!

காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, லலிதாம்பாள், பெரியநாயகி, வேத நாயகி, கற்பகாம்பாள், மாரியம்மன், வேம்புலி அம்மன், முப்பிடாதி அம்மன், செல்லியம்மன், இசக்கியம்மன் என்று எல்லா பெண் தெய்வங்களும் நமக்கு அன்பைப் பொழிந்து, கருணையை வழங்கி, அருள் செய்து , நம்மை இன்னும் இன்னும் வாழச் செய்கிறார்கள். வாழ அருளிக் கொண்டே இருக்கிறார்கள்.

கரையில் இருந்து தானே பயணமானது தொடங்கும். அது… கரையில் இருந்து சாலைக்கு வந்து செய்கிற பயணமாக இருந்தாலும் சரி… கரையில் இருந்து கடலுக்குள் சென்று பயணிப்பதாக இருந்தாலும் சரி… கரை என்பது ஒரு புள்ளி. ஒரு மையம். ஒரு துவக்கம். ஓர் ஆரம்பத்தின் நேர்க்கோடு. தவிர, ‘நம்மை கரையேற்றிவிட யாருமே இல்லியே…’ என்றுதானே ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

‘நல்லபடியா கரையேறிட்டாப் போதும்பா சாமீ’ என்றுதானே புலம்பிக் கொண்டிருக்கிறோம். ‘நாமெல்லாம் கரையை அடையறதுக்கு ஒரு வழி கிடைக்காதா. ஒரு கலங்கரை விளக்கம் இருக்காதா…’ என்பதுதானே நம் எல்லாருடைய எதிர்பார்ப்பு. அப்படி கரையேற்றி விடுபவள், கரையேறுவதற்கு வழிகள் செய்பவள், கரையை அடைய வழிகாட்டியாக இருப்பவள்… கடற்கரைக்கு சற்றே தூரத்தில் , வெகு அருகிலேயே இருப்பவள்தான் காளிகாம்பாள்!

ரயில் மார்க்கத்தில் சென்னையில் அதுதான் முதல் ஸ்டேஷன். அங்கிருந்துதான் சென்னை வாழ் மனிதர்களுக்கான, மனிதர்களின் பயணங்களுக்கான யூனிட் ரயில் எனப்படும் எலெக்ட்ரிக் ரயில்கள் இயங்குகின்றன. அது… பீச் ஸ்டேஷன். நம்முடைய வாழ்க்கைப் பயணத்தின் இருளையெல்லாம் விலக்கும் ஒளியெனத் திகழும் காளிகாம்பாள் குடியிருக்கிற கோயில், இந்த ஸ்டேஷனுக்கு அருகில்தான் இருக்கிறது.

சென்னையின் முக்கிய முனைப் பகுதி, பாரிமுனை. ஒருகாலத்தில், தமிழகம் முழுவதுக்கும் செல்வதற்கு, இங்கிருந்துதான் பேருந்துகள் கிளம்பின. இங்கேதான் பேருந்து நிலையம் இருந்தது. இந்தப் பகுதியில்தான் காளிகாம்பாள் கோயில் கொண்டு, காட்சி தந்துகொண்டிருக்கிறாள். பேருந்துப் பயணம் தொடங்கிய இடத்தில் இருந்தே, இந்தத் தொடரின் பயணமும் முதல் கியர் போட்டுத் தொடங்குகிறது.

அதேபோல், இங்கேதான் பூக்கடை இருந்தது. பூக்கடை என்றால் ஒரு கடை இல்லை. பூ மார்க்கெட். தமிழகத்தில் இருந்தும் கர்நாடகத்தில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் இங்கே பூக்கள், சந்தைக்கு வந்திறங்கும். எல்லாப் பூக்களும் இங்கே கிடைக்கும்.

மொத்த இடமும் மணத்துக் கிடக்கும். பூ என்பது மங்கலகரமான , நம் வாழ்க்கையுடன் ஒன்றியிருக்கிற புனிதப் பொருள். பொருள் பொதிந்த அடையாளம். ‘பொன் வைக்கிற இடத்துல நாங்க பூ வைக்கிறோம்’ என்று விலையுயர்ந்த பொன்னுக்கு நிகராக பூக்களைச் சொல்லுகிறவர்கள் நாம்!

பூக்கள் வாங்காத வீடே இல்லை. பூக்களைச் சூட்டுவதற்காகவே தெய்வப்படங்களையும், தெய்வப் படங்களுக்குச் சூட்டுவதற்காகவே பூக்களையும் கொண்ட பின்னிப்பிணைந்த பூவுடனான நம் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

மங்கலத்தன்மை கொண்டது. சுமங்கலிகளின் ஆகப்பெரிய சொத்து, தாலியும் மஞ்சளும் குங்குமமும்தான்! அந்தத் தாலியை மஞ்சளை குங்குமத்தை, ஆயுள் முழுவதும் பெண்களுக்கு வழங்கி பலம் தரக்கூடிய காளிகாம்பாள், சென்னையின் பாரிமுனைப் பகுதியில்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறாள்.

காளிகாம்பாள். சென்னை ஐகோர்ட்டுக்கு அருகில் உள்ள அற்புதமான கோயில். நம் மனதில் உள்ள வழக்குகளையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் சங்கடங்களையும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும்… நம்மில் உள்ள குற்றம்குறைகளையும் போக்கி அருளக்கூடியவளாக அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் காளிகாம்பாள்.

இவளின் கோயிலுக்குள் நுழையும் போதே, அம்மாவைப் பார்க்கப் போவதாகவே என் உள்ளுணர்வு சொல்லும். உள்ளம் பேரானந்தத்தில் துள்ளும். திக்குத்திசை தெரியாத கன்று, தாய்ப்பசுவைப் பார்த்ததும் ஓடுகிற ஓர் பரவசமும் நிம்மதியும் எனக்குள்ளே பரவியிருக்கும்.

கிழக்குப் பார்த்த ஆலயம் கோயில். நம் வாழ்க்கையையே விடியச் செய்யவும் உதிக்கச் செய்யவும் மலரச் செய்யவும் அமைந்திருக்கிற சக்தி மிக்க கோயில். வாசலில் நின்று, தலை நிமிர்த்தி, கோபுரம் பார்த்து, கனிவு முகம் காட்டும் காளிகாம்பாளைத் தரிசிக்கச் செல்வோம்.

சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றால், காளிகாம்பாளையும் பிரத்தியங்கிரா தேவியையும் தரிசிக்கலாம். செவ்வாய், வெள்ளியில் காளிகாம்பாளை தரிசியுங்கள். அப்படியே பிரத்தியங்கிரா தேவியையும் வழிபடுங்கள். வற்றாத செல்வமும் மனோபலமும் தந்தருள்வாள் தேவி.

வீர சிவாஜி வழிபட்ட காளிகாம்பாள் என்று ஆலய சரிதம் சொல்லுகிறது. மகாகவி பாரதியார் வழிபட்ட திருத்தலம் என்று போற்றப்படுகிறது. சக்தி வழிபாடு என்பதே மிகவும் மகத்துவம் கொண்டது. அதிலும் சக்தி எனும் அம்பிகைக்கு உரிய நன்னாளில், அவள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அவளை வணங்கி வழிபடுவது இன்னும் இன்னுமாக எண்ணற்ற பலன்களை வழங்கக்கூடியது. இன்னும் குறிப்பாக, ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த அம்மன் கோயில்கள் ரொம்பவே சக்திமிக்கவை. அப்பேர்ப்பட்ட ஆலயங்களில் காளிகாம்பாள் கோயிலும் ஒன்று!

 
’மனசு சரியில்லை’ என்றால் காளிகாம்பாள் சந்நிதியில் வந்து அமர்ந்து பிரார்த்திக்கிற வழக்கம் எனக்கு உண்டு. இப்படி என்னைப் போலவே வருகிற பக்தர்கள், கடவுளாகவோ தெய்வமாகவோ காளிகாம்பாளைப் பார்ப்பதில்லை. ’என் அம்மா’ என்றுதான் நான் நினைத்து, அவளைப் பார்ப்பேன். சிரிப்பேன். பூரிப்பேன். பூஜிப்பேன். கண்கண்ட தெய்வம் என்று சொல்வோமே..!

காளிகாம்பாள் கண்கண்ட தெய்வம். நம்முடைய வருத்தங்களை, நமக்கு ஏற்பட்ட அவமானங்களை அவளிடம் சொல்லி, முறையிட்டால் போதும். அந்த அவமானங்களையே வெற்றிப்பதக்கமாக்கி தரும் வித்தைக்காரி காளிகாம்பாள்!

 
உலகில் நீங்கு எங்கிருந்தாலும், ஒருமுறை… ஒரேயொரு முறை… சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து, அவளை தரிசியுங்கள். பிறகு உங்களின் மொத்த வாழ்க்கைக்கும் அவள் வழிகாட்டியாகத் திகழ்வாள். பக்கத்துணையாக இருப்பாள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *