பிரபலங்களுடன் நின்று புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதில் தனக்கென ஒரு பிரத்யேகமான ஸ்டைலை ஓரி வைத்துள்ளார். இது இணையத்தில் மிகவும் பிரபலம். “இந்தியாவில் ஷாருக் கான் மற்றும் ஓரி ஆகிய இருவரின் போஸ்கள் மட்டுமே மிகவும் பிரபலம். அந்த உச்சத்தை நான் அடைந்ததில் எனக்கு மிகவும் பெருமை” என அவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
ஒரே ரீலில் பல லட்சங்களும், நிகழ்ச்சிகள் மூலம் கோடிகளும் சம்பாதித்தாலும், தனது பணத்தை இன்னும் தனது அப்பா மற்றும் அம்மாவே நிர்வகித்து வருவதாக கூறியுள்ளார். “பணத்தை நானே நிர்வகிக்கும் அளவுக்கு நான் எப்போதுமே மாறப் போவதில்லை” என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் புகழ் என்பது வெறும் கவனத்தையும் ரசிகர்களையும் மட்டுமே ஈர்த்து வந்த நிலையில், இன்று அந்தப் புகழையே ஒரு பெரும் வியாபாரமாக மாற்ற முடியும் என்பதற்கு ஓரி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எந்தவொரு பாரம்பரியமான வேலையும் இல்லாமல், தனது தனித்துவமான பிம்பத்தையும் (Personal Branding), சமூக வலைதளத் தாக்கத்தையும் வைத்து ஒருவரால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பது இன்றைய ‘டிஜிட்டல் கிரியேட்டர்’ உலகின் ஆச்சர்யப்பட வைக்கும் ஓர் உண்மை.
ஓரி கூறியுள்ள வருமான எண்கள் அதிகாரபூர்வமாகத் தணிக்கை செய்யப்படவில்லை என்றாலும், அவர் அப்படிப் பேட்டியளித்ததும், அதற்காக மக்கள் அவருக்குப் பணம் கொடுக்கத் தயாராக இருப்பதும் முற்றிலும் நிஜமே!