சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள லலித் கலா அகாடமியில் “உருவாதலுக்கும் இருத்தலுக்கும் இடையில்” என்ற கருப்பொருளில் கண்கவர் கலை கண்காட்சி மே 15 தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலைஞர்களின் சிற்பங்கள் மற்றும் பிற கலைப்படைப்புகளும் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. முதல் நாளே கலைஞர்களும் கலை மீதான ஆர்வம் கொண்டோரின் வருகையும் திரளாக இருந்தது.
இந்தக் கண்காட்சியில் தன் படைப்பினை காட்சிப்படுத்தியிருக்கும் இளம் கலைஞர் சரத்குமாரிடம் பேசும்போது,
” இந்தக் காட்சிக்கூடத்தில் என்னுடைய படைப்பாக இரண்டு பனை மரங்கள் நிலப்பரப்பிலே இருப்பது போன்று கல்லிலேயே உருவாக்கிய சிற்பத்தை காட்சிப்படுத்தி இருக்கிறேன். உலோகம் மற்றும் கல்லால் ஆன இரண்டு படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. நான் தினமும் எனது காட்சிக்கூடத்திலிருந்து ஜன்னல் வெளியே பார்க்கும் போது இரண்டு பனை மரங்களுக்கிடையேயான சூரிய உதயமும் நிலா வருகையும் பார்க்க ரம்மியத்தை ஏற்படுத்தும். அதை பார்க்கும்போது எனக்குள் ஒரு இளம் பெண்ணும் இளம் வாலிபரும் காதலிப்பது போன்ற ஓர் உணர்வு உண்டானது. இருவரும் உச்சியில் இருந்து ஊரை ரசிக்கிறார்கள் என்ற உணர்வு உருவானது. அந்த ரசிப்பின் வெளிப்பாடு தான் இந்த சிற்பக்கலை. இந்த இரு பனை மரங்களின் காதல் உணர்வு தான் இந்த கலை உணர்வாக உருவாகி இருக்கிறது. எனது அதிகளவிலான படைப்புகள் சிற்பங்கள் சார்ந்தது இன்றி மற்ற ஓவியக் கலைகள் மீதும் ஆர்வம் காட்டி வருகிறேன். நிறைய தேவையற்ற உலோகங்கள் மற்றும் தூக்கி எறியப்படும் பழைய பொருள்களில் இருந்து எனக்கு பல வடிவிலான அழகியல் மிகுந்த ஒரு பொருளை உருவாக்கத் தோன்றும். உலகில் எந்த பொருளும் தேவையற்றதல்ல… ஒவ்வொரு தேவையற்ற பொருளில் இருந்தும் ஒரு ஆக்கபூர்வமான கலை உணர்வை கட்டி எழுப்ப முடியும்.” என்கிறார் சரத்.
கண்காட்சியில் பெண் கலைஞர் பத்ம பிரியாவின் படைப்புகள் காண்போரை கவர்ந்திருந்தது. பெண் உடலை மையமாக வைத்து தன் படைப்பினை காட்சிப்படுத்தியிருக்கும் பத்மாவிடம் தன் படைப்புகள் குறித்து கேட்ட போது,
“பெண்களின் உடலை எவ்வாறு பார்க்கிறார்கள். சமூகத்தில் எவ்வாறு பெண்களின் உடல் கட்டமைக்கப்படுகிறது. ஒரு பெண்ணை உயிர் உள்ள மனிதராக பார்க்கிறார்களா அல்லது வெறும் பொருளாக பார்க்கிறார்களா என்பதைத்தான் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். ஒவ்வொரு பெண்ணும் தனது பயணத்தில் தனது உடல் தோற்றம் மீது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிறாள். நாம் எப்படி நடக்க வேண்டும்? எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி உடலை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகத்தில் பெண்களுக்கு உருவாக்கி வைத்து விட்டார்கள். சிறு வயதில் இருந்து பெண்கள் மீது அதிகப்படியான போலியான நம்பிக்கைகள் திணிக்கப்பட்டு விட்டன. அதனால் ஒவ்வொரு குழந்தையும் வளர்ச்சி நிலையின் போது உடல் அளவிலும் உளவியல் ரீதியிலும் பின் தங்குகிறாள். பின்னர் வளர்ந்து இந்த சமூகத்தில் அவள் நுழையும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறாள். இந்த துண்டாக்கப்பட்ட ஓவியத்தில் ஆண்களின் பார்வை எவ்வாறு இருக்கிறது என்பதைக் கேள்விக்குள் ஆக்குகிறது எனது படைப்பு. “பெண்ணும் பெண் சார்ந்த உடலும்” என்பதை மையக்கருத்தாக கொண்டே எனது ஓவியங்கள் அமைந்திருக்கின்றன” என்று கூறினார்.
இறுதியாக மனித உடலை வைத்து தன் படைப்புகளைக் கொடுத்த பிரித்விராஜ் நம்மிடம் பேசும்போது,
“நான் கிராபிக் டிசைனராக பணியாற்றுகிறேன். ஓவியங்கள், சிற்பங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் வல்லுநராக இல்லாமல், என்னென்ன பொருள்கள் எனக்கு கிடைக்கிறதோ அதை வைத்து புதியதை உருவாக்கி வருகிறேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள், அரசியல் சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்தேன். தற்போது என்னைப் பற்றியும் என்னைச் சுற்றி நடப்பவற்றை பற்றியும், என்னை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதைப் பற்றி எல்லாம் கவனிக்க ஆரம்பித்து, பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கை எவ்வாறு செல்கிறது, ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் ஏன் ஒவ்வொன்றைத் தேடி பயணிக்கிறான். அது சரியான பாதை தானா அல்லது தவறான பாதையா..? அதில் எப்படி நாம் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம் என்பது பற்றி நான் இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த எண்ணங்கள் தான் கலை வடிவில் இங்கு காட்சியாகி இருக்கிறது. எதிர்காலத்தில் மக்கள் சார்ந்த பணிகளுக்குக்கூட செல்லலாம். அதுவும் கலையை சாமானியர்களுக்கு கடத்தும் விதமாகவே அமையும். கடந்த இரண்டு வருடங்களாக வரைந்து வரைந்து அத்தனையும் டைரியாக வைத்துள்ளேன். மனித இருப்பை மையமாகக் கொண்டு என்னுடைய படங்களை வரைந்து இருக்கிறேன். மனித பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வாழ்வியலை எனது ஓவியங்கள் உங்களுக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன் என்று முடித்தார் ” பிரித்விராஜ்.