ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது: இபிஎஸ்  | Eps praised Pasumpon Muthuramalinga Thevar

1381531
Spread the love

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது. வந்தால் அதுகுறித்து பதில் சொல்கிறேன் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி, 63-வது குருபூஜையையொட்டி தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், எம்.மணிகண்டன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது: எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்தார். தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்தவர். எம்ஜிஆர் சட்டப்பேரவை வளாகத்தில் தேவருக்கு முழு உருவப்படத்தை திறந்து வைத்து அவருக்குப் புகழ் சேர்த்தார். ​

அதேபோல், முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோ தங்கத்தில் தேவர் சிலைக்கு தங்கக்கவசம் சாற்றினார். சென்னை நந்தனத்தில் முழு உருவ திருவுருவச் சிலையை நிறுவி பெருமைப்படுத்தினார். ​தேவர் தனது வாழ்நாளில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சுமார் 4 ஆயிரம் நாட்கள் சிறையிலே இருந்தவர்.



அருப்புக்கோட்டை எம்பி தேர்தல், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தேர்தல் என 2 தேர்தல்களிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ​தனக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கிய கொடை வள்ளல். ​அவருக்கு மேலும் புகழ் சேர்க்கின்ற விதமாக அதிமுக சார்பாக பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம்.

தேவர் அனைத்து மதம், சாதியை சேர்ந்தவர்களுக்கும் பொதுவானவர். தேசபக்தி மிக்கவர், தேசத்துக்காக வாழ்ந்திருக்கிறார். மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். அப்படி இருக்கின்ற ஒருவருக்கு அனைவரும் சேர்ந்து பாரத ரத்னா வழங்க வழிமொழிவது, அவருக்கு புகழ் சேர்ப்பதாகும். ​ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் வருவது எனக்கு தெரியாது. வந்தால் அது குறித்து பதில் சொல்வேன் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *