India
oi-Nantha Kumar R
போபால்: மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அவனிந்திர குமார் சிங் நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நிலையில் அவர் தனது முழு ஓய்வூதிய பலன் ரூ.1.01 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளதோடு, அவரது உடல் மற்றும் மனைவியின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்குவதாக அறிவித்து நெகிழ வைத்துள்ளார்.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அவனிந்திர குமார் சிங். இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இவருக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது.
இந்த விழாவில் அவனிந்திர குமார் சிங், அவரது மனைவி இந்திரா சிங் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி அவனிந்திரா குமார் சிங் அனைவரையும் நெகிழ வைத்தார்.
நீதிபதியாக பணியாற்றியதற்காக தனக்கு கிடைக்கும் அனைத்து ஓய்வூதிய பலனையும் ரூ.1.01 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும், தனது உடல் மட்டுமின்றி மனைவி இந்திரா சிங்கின் உடலையும் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக கூறினார். இதுதொடர்பாக அவனிந்திர குமார் சிங் கூறுகையில், ”கடவுளை வழிபடுவதன் மட்டுமின்றி இப்பூமியில் அவர் படைத்த சிறிய மற்றும் பெரிய என்று அனைத்து உயிரினங்களையும், பொருட்களையும் பராமரிப்பு தான் நாம் அவருக்கு செய்யும் சேவை என்று நம்புகிறேன.
இதனால் நமக்காக மட்டுமே வாழ்ந்தால் அதில் என்ன பயன்? என்ற கொள்கையின் அடிப்படையில் சமூகத்திற்கு பங்களிக்க விரும்புகிறோம். இதனால் நாங்கள் மறைந்த பிறகு எங்கள் உடல்களை மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் படிப்பிற்காக தானமாக வழங் நானும் என் மனைவியும் முடிவெடுததுள்ளோம். உடல் தானம் செய்வது தொடர்பாக 2 நாளுக்கு முன்பு முறைப்படி பதிவு செய்துள்ளோம்.
அதுமட்டுமின்றி கணக்கீட்டின்படி எனக்கு ரூ.1.01 கோடி ஓய்வூதி பலனாக (GPF or General Provident Fund) கிடைக்கும். இந்த மொத்த பணத்தையும் நாட்டை மேம்படுத்தும் வகையில் PM CARES நிதிக்காக நான் வழங்குகிறேன். நானும் எனது மனைவியும் ஓய்வூதியம் பெறுபவர்கள். நாங்கள் எங்களின் வாரிசுகளுக்கு சேமித்து வைப்பதற்கு பதில் நாட்டை கட்டியெழுப்பும் பணிக்காக வழங்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளோம். நாடு முழுவதும் அவசர கால நிவாரண உதவிக்கு PM CARES நிதி பயன்படுத்துவதால் இது மிகவும் முக்கியமானது. இது என்னுடைய தொடக்கம் தான். முடிவு கிடையாது. நான் ஓய்வு பெற்ற பிறகு புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். புதிய பிளாட்பார்மில் நான் பணியாற்ற இருக்கிறேன்” என்றார்.
ஓய்வு நீதிபதி அவனிந்திர குமார் சிங் தனது ஓய்வூதிய பலனை PM CARES-யில் செலுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த PM CARES என்பதன் விரிவாக்கம் Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations என்பதாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் பிரதமரின் மக்களுக்கான உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி என்பதாகும். கொரோனா, இயற்கை பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் இந்த நிதியில் இருந்து பொதுமக்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்க PM CARES நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி தனது உடல் மட்டுமின்றி மனைவியின் உடலையும் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கி ரூ.1.01 கோடி ஓய்வூதிய பலனையும் தானமாக வழங்கிய அவனிந்திர குமார் சிங் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். கடந்த 964ம் ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி இட்டா மாவட்டத்தில் பிறந்தார். இவர் பிஎஸ்சி, எல்எல்பி படிப்பை முடித்தார். வழக்கறிஞராக பணியாற்றினார். தனது 37 வது வயதில் நீதிபதியானார். 1990ம் ஆண்டு மே 31ம் தேதி முதல் சிவில் நீதிபதி கிளாஸ் II வாக பணியில் சேர்ந்தார். நீதித்துறையில் 37 ஆண்டுகளாக பணியாற்றி தற்போது மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.