India
oi-Vishnupriya R
போபால்: கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றமே இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்காக ஒருவரை 3 மாதங்கள் சிறையில் அடைத்தது எப்படி என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ல தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைந்த ஜி.பி.சிங்கின் 4ஆம் ஆண்டு சொற்பொழிவு நடந்தது.

இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி விஷால் தகத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதசி உஜ்ஜல் பேசியதாவது: ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம், அமைதியான போராட்டம் போன்றவை எல்லாம் குற்றமாக பார்க்கும் நிலை அதிகரித்து வருகிறது.
இதனால் மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவதில் தாமதமாகிறது. கங்கை ஆற்றில் படகில் இப்தார் நிகழ்ச்சி நடத்திய இளைஞர்கள் மூன்று மாதங்களுக்கு சிறை தண்டனை பெற்றனர். கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல.
அப்படியிருக்கும் போது தவறில்லாத செயலுக்காக 3 மாதங்கள் சிறையில் அடைத்தது ஏன், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களும் சிறைப்படுத்தப்படுகிறார்கள்.
ஜாமீன் வழங்கும் போது அவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. உதாரணமாக ஜாமீன் வழங்கும் போது பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, சமூகவலைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எந்த கருத்தையும் பதிவு செய்யக் கூடாது என்றெல்லாம் விதிகள் வகுக்கப்படுகின்றன.
சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி கேட்கும் சூழலை உருவாக்க வேண்டும், கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியதற்காக மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது. அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் மாணவர்கள் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் பெரிய நம்பிக்கையைக் காண்கிறேன். விவாதங்களும் எதிர்க் கருத்துகளுமே ஜனநாயகத்தின் உயிர் நாடி. ஆனால் சாதாரண செயல்பாடுகளை கூட குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது என்று அவர் பேசியிருந்தார்.
வாரணாசியில் கங்கை ஆற்றில் படகு சவாரி செய்த போது இப்தார் நிகழ்ச்சி நடத்திய இளைஞர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு 14 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறை தண்டனை பெற்றனர். கங்கை நதியில் சிக்கன் சாப்பிடுவதை தடை செய்ய சட்டம் எதுவும் இல்லை. ஆனால் புனித நதியை அசுத்தம் செய்வதாகக் கூறி கங்கை ஆற்றில் படகு சவாரி செய்த போது சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளதை நீதிபதி வேதனையாக தெரிவித்திருந்தார்.
ஆட்சியாளர்கள் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் இறைச்சி எலும்புகளை ஆற்றில் வீசியதாகவும் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மத உணர்வுகளை புண்படுத்துதல், பகையைமை வளர்த்தல், பொதுத் தொல்லை கொடுத்தல் தொடர்பான பிஎன்எஸ் பிரிவுகள், நீர் மாசு கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.