கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை.. நியூசிலாந்து போகும் பிரதமர்! சர்வதேச உறவில் புதிய மைல்கல் | PM Modi’s New Zealand Visit: A Historic Milestone After Four Decades, Signals Stronger Ties

Spread the love

International

oi-Halley Karthik

வெலிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு ஆறு நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறார். இதில் நியூசிலாந்து பயணம் குறிப்பிடத்தக்கது. கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு போவது இதுவே முதல் முறையாகும்.

தனது பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் இன்று இந்தோனேசியா சென்றடைகிறார். 2018-ம் ஆண்டு இந்தியா-இந்தோனேசியா இடையிலான உறவு ‘விரிவான ராஜதந்திர கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, பிரதமர் மோடி அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

narendra modi India New Zealand

தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தும் பிரதமர், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் உரையாற்றுகிறார். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகருக்குச் சென்று, அங்குள்ள பிரம்பானன் கோயில் வளாகத்தைப் பார்வையிடுகிறார். மலாக்கா நீரிணைப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு குறித்து இந்தப் பயணத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும்.

ஆஸ்திரேலியா பயணம்

பயணத்தின் இரண்டாம் கட்டமாக, ஜூலை 8-ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு பிரதமர் செல்கிறார். அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸுடன் 3-வது இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். இதில் முக்கியமான தாதுக்கள், இணைய பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், இரு நாட்டு முன்னணி தொழிலதிபர்கள் பங்கேற்கும் ‘இந்தியா-ஆஸ்திரேலியா சிஇஓ-க்கள் மன்றத்திலும்’ (CEOs Forum) அவர் உரையாற்றுகிறார்.

நியூசிலாந்து பயணம்

இறுதிக்கட்டமாக, ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிரதமர் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் இணைந்து வர்த்தகம், வணிகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர் ஆய்வு செய்வார்.

இந்த மூன்று நாடுகளிலும் உள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார். இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’ மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதில் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *