கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மமதா?  – Kumudam

Spread the love

கடந்த சில வாரங்களாக, கட்சியின் தலைமைத்துவம், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் தொடர்பாக திரிணாமூல் கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக, கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த சில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் ஒன்றிணைந்து மமதாவை புறக்கணிக்கத் தொடங்கினர். அவருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததோடு, தாங்கள் தான் உண்மையான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி என்றும் தங்களைத் தான் சட்டமன்றத்தில் அங்கீகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், மம்தா பானர்ஜியை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக, அந்தக் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தீர்மானக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மனுவில், தற்போதைய திரிணாமூல் காங்கிரஸ் தலைமையின்மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும், கட்சியின் உண்மையான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான கட்டுப்பாடு தங்களிடமே இருப்பதாகவும் வலியுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் அமைப்பு மீதான உரிமையை தங்களது அணிக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தேர்தல் ஆணையத்திடம் முன்வைக்க அதிருப்தி தரப்பு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க அரசியலில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த மம்தா பானர்ஜி, மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை தொடர்ந்து பதவி வகித்துள்ளார். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் சவால்களை எதிர்கொண்டு தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திய அவர், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்தார். இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சிக்குள் பல்வேறு நிலைகளில் அதிருப்தி அதிகரித்ததாகவும், தலைமைத்துவ மாற்றம் குறித்து மறைமுகமாக விவாதங்கள் நடைபெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த அறிவிப்பு, மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் எதிர்காலம், தலைமைத்துவம் மற்றும் அமைப்பு ரீதியான கட்டுப்பாடு தொடர்பாக அடுத்த சில நாட்களில் முக்கியமான அரசியல் திருப்பங்கள் நிகழக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி தரப்பிலிருந்தோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையிலிருந்தோ இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த அரசியல் மோதல் மேலும் தீவிரமடையுமா அல்லது சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படுமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *