India
oi-Nantha Kumar R
போபால்: கணவர் விடும் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவித்து மனைவி விவாகரத்து கோரினார். விவாகரத்துக்கு முன்பாக இருவரும் கவுன்சிலிங் சென்றனர். அப்போது கவுன்சிலர் கொடுத்த ஒற்றை அட்வைஸ் இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்துள்ளது. விவாகரத்து முடிவை கைவிட்ட மனைவி தனது கணவருடன் வாழ்வதாக கூறியுள்ளார். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவவனும் நிறைய அன்பு வைத்திருந்தனர். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் குறட்டையால் குழப்பம் ஏற்பட்டது.
இரவில் தூங்கும்போது அந்த இளைஞர் குறட்டை விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.கடந்த சில மாதங்களாக அவர் சத்தமாக குறட்டை விட்டுள்ளார். இதனால் மனைவி தூங்க முடியாமல் தவித்தார். இதுபற்றி கணவரிடம் கூறியபோது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அந்த மனைவி விவாகரத்து பெறுவது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று நினைத்தார்.
இனால் அவர் விவாகரத்து முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சனை அவர்களின் குடும்பத்திற்கு ஆலோசனைகளை வழங்கும் கவுன்சிலர் ரிதா துளிக்கு சென்றது. அவர் இருவரையும் அழைத்து பேசினார். கணவன் – மனைவி இருவரையும் 3 மாதம் பிரிந்து இருக்கும்படி கூறினார். இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தம்பதியின் மகன் தனது தாயுடன் வசித்து வந்தனர்.
இருவருக்குமான இந்த இடைவெளி கணவனுக்கு, மனைவியையும், மனைவிக்கு கணவனையும் தேட வைத்தது. இதையடுத்து 3 மாதம் கழித்து அவர்கள் மீண்டும் கவுன்சிலரிடம் சென்றபோது மனைவி தனது விவாகரத்து முடிவில் இருந்து பின்வாங்கினார். விவாகரத்து செய்ய போவது இல்லை. இருவரும் சேர்ந்து வாழ்கிறோம் என்று மனம் மாறினார்.