கண்டுகொள்ளாத துரைமுருகன்; கவனம்பெற்ற தவெக சுதாகர் – காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்துக்கு விடிவுக் காலம்!

Spread the love

டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காட்பாடி தொகுதியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வியடைந்தார்.

த.வெ.க சார்பாக போட்டியிட்ட டாக்டர் எம்.சுதாகர் வெற்றிபெற்று, எம்.எல்.ஏ-வாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், காட்பாடி காந்தி நகரில் துரைமுருகன் வீட்டுப் பின்பக்கத் தெருவில் அமைந்திருக்கும் எம்.எல்.ஏ அலுவலகத்தை நேற்றைய தினம் கொண்டாட்டத்துடன் திறந்து மக்கள் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார் டாக்டர் சுதாகர்.

தி.மு.க ஆட்சியில், காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகம்
தி.மு.க ஆட்சியில், காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகம்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இத்தனை ஆண்டுகாலம் அதிகாரத்தில் தொடர்ந்தபோதும், எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து தொகுதி மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றதில்லை; குறைகளையும் கேட்டதில்லை.

புதர்மண்டிக் கிடந்தது அந்த அலுவலகம். 2011-ல் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதுதான் எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறக்காமலிருந்தார் என்றாலும், கடந்த 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாக இருந்தபோதும்கூட எம்.எல்.ஏ அலுவலகத்தை ஒருநாளும் திறக்கவில்லை.

துரைமுருகனை பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே காட்பாடி மக்கள் பார்த்து வந்தனர். அப்போதும்கூட, அவரிடம் மனு அளிக்க முடியாது. யாரேனும் மனுவுடன் நின்றாலும் அவர்களைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்.

சில நேரங்களில், துரைமுருகனின் பேச்சும், உடல்மொழியும் மக்களை அலட்சிப்படுத்தும் வகையில் இருக்கும். இதுபோன்ற காரணங்களால், தொகுதி மக்கள் துரைமுருகனைச் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.

எம்.எல்.ஏ அலுவலகம் இருட்டடிப்பு செய்யப்பட்டதால், அந்த அலுவலகம் எங்கு இருக்கிறது? என்பதுகூடத் தொகுதி மக்கள் பெரும்பாலானோருக்குத் தெரியாமலிருந்தது.

காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர் காந்திராஜ்
காட்பாடி எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்துவைத்த அமைச்சர் காந்திராஜ்

இந்த நிலையில்தான் தேர்தல் பிரசாரத்தின்போது எம்.எல்.ஏ அலுவலக விவகாரத்தைக் கையிலெடுத்தார் டாக்டர் சுதாகர். செடி, கொடிகள் படர்ந்து புதர்மண்டிய காட்சியை புகைப்படம் எடுத்து பொதுமக்களிடம் காட்டினார்.

`இந்த அவலம் மேலும் நீடிக்கக் கூடாது. முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என முழங்கினார் டாக்டர் சுதாகர். மக்களிடம் அவருக்கான வரவேற்பு அதிகமாகக் காணப்பட்டது. தேர்தலிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகனைத் தோற்கடித்து வெற்றிபெற்றார் டாக்டர் சுதாகர்.

உறுதியளித்தபடி, எம்.எல்.ஏ அலுவலகத்தையும் புதுப்பித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் அரக்கோணம் காந்திராஜை அழைத்து திறந்திருக்கிறார். முதன்முறையாக, காட்பாடி தொகுதி மக்களும் மிக ஆர்வமாக எம்.எல்.ஏ அலுவலகத்தை வந்து பார்த்துச் செல்கின்றனர்.

எம்.எல்.ஏ சுதாகரும் அலுவலகத்தில் அமர்ந்து மனுக்களைப் பெற்றுவருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *