கண்டுக்கொள்ளாத கழகம்… ஓ.பி.எஸ். குடும்பத்தில் குடைச்சல்? தவெக தாவும் ரவீந்திரநாத்?  – Kumudam

Spread the love

அரசியலில் எத்தனை பின்னடைவுகள் வந்தாலும், தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தற்போது அறிவாலயத்தின் ஆதரவுடன் எம்.எல்.ஏ.வாகவும் தொடரும் நிலையில், அவரைச் சுற்றியிருக்கும் குடும்ப அரசியல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால், இந்த முறை பிரச்னை எதிர்க்கட்சியிடமிருந்து இல்லை.  வீட்டுக்குள்ளிருந்தே வருகிறதாம். 

ஓ.பி.எஸ். உடன் அரசியல் பயணத்தில் தொடர்ந்து வந்த அவரது மகன்கள், சகோதரர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்களுக்கு, இதுவரை திமுகவில் எதிர்பார்த்த அளவுக்கு பொறுப்புகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி இருப்பதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

குறிப்பாக, முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத்துக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாகவும், அது நிறைவேறாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியில் உரிய பொறுப்பு கிடைக்குமா, இல்லையா என்ற கேள்வியை ரவீந்திரநாத், ஓ.பி.எஸ் இடம் முன்வைத்திருப்பதாகவும், தங்களுடன் வந்தவர்களுக்கு தொடர்ந்து அங்கீகாரம் கிடைக்காவிட்டால் தவெக பக்கம் செல்வது குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் தவெக தலைவர் விஜய்யை நோக்கி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஓ.பி.எஸ். குடும்பத்தைச் சுற்றி இப்படியொரு பேச்சு கிளம்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, ரவீந்திரநாத்தை ஓ.பி.எஸ். சமாதானப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “கட்சியில் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்… உரிய நேரத்தில் எல்லாம் நடக்கும்” என்ற வகையில் ஓ.பி.எஸ். அவரிடம் கூறியதாகச் சொல்கிறார்கள்.

ஓ.பி.எஸ். தனது அரசியல் எதிர்காலத்தை ஒரு பக்கம் கவனித்துக் கொண்டிருக்க, அவரைச் சார்ந்து வந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளையும் சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கட்சிப் பதவிகள், அரசியல் அங்கீகாரம் என எதிர்பார்ப்புகள் தொடரும் நிலையில், ஓ.பி.எஸ். தரப்பில் அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதுதான் இப்போது கேள்வி.

‘கொஞ்சம் பொறுங்கள்’ என்ற ஓ.பி.எஸ். வார்த்தையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? இல்ல,. தவெக என்ற அடுத்த கதவைத் தட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *