கண் அசைக்கும் பாஜக.. கட்சி தாவும் 17 பேர் கட்சி.. இதுதான் அரசியல் மியூசிக்கல் சேர்! பின்னணி | West Bengal TMC Crisis: 17 MPs Likely to Join BJP During Durga Puja, Says Jagadish Barma Basunia

Spread the love

India

oi-Vigneshkumar

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்கிறது. இதற்கிடையே அக்கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் 17 பேர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக கூச் பெஹார் தொகுதி எம்பி ஜகதீஷ் சந்திர பர்மா பாசுனியா தெரிவித்துள்ளார். துர்கா பூஜை காலகட்டத்தில் இந்த அரசியல் மாற்றம் நடக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்தன. ஒரு காலத்தில் திரிணாமுலின் இரும்பு பெண்மணியாக இருந்த மம்தா பானர்ஜி, தேர்தல் தோல்விக்கு பிறகு மிக பெரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டார். திரிணாமுலில் இருந்தே பலரும் மம்தாவுக்கு எதிராக கலகம் செய்தனர். இதனால் ஒரு கட்டத்தில் அவரது சொந்த கட்சியில் இருந்தே வெளியேற்றப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.

West Bengal TMC Crisis West Bengal Trinamool Congress

மேற்கு வங்கம்

குறிப்பாக அதிருப்தி எம்பிகள் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சி என்ற கட்சியில் ஐக்கியமாகினர். மேலும், மோடி தலைமையிலான என்டிஏ அரசுக்கும் ஆதரவளித்தனர். இருப்பினும், அவர்கள் சீக்கிரமே பாஜக பக்கம் திரும்புவார்கள் என்ற பேச்சு அடிப்பட்டது. இந்தச் சூழலில் தான் 20 எம்பிக்களில் 17 பேர் ஒன்றாக பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக கூச் பெஹார் தொகுதி எம்பி பாசுனியா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் ஐக்கியம்

இது தொடர்பாக அவர், “நாங்கள் 17 எம்பிக்கள் ஒன்றாக பாஜகவில் இணைய உள்ளோம். 20 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் ஒன்றாக கட்சி மாறுவதால், கட்சி தாவல் தடைச் சட்டம் எங்களுக்கு பொருந்தாது” என்றார். கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற எம்எல்ஏக்களில் அல்லது நாடாளுமன்ற எம்பிக்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒன்றாக வேறு கட்சியுடன் இணைந்தால், அந்த இணைப்பு கட்சி தாவலாக கருதப்படாது.

3 பேர் மட்டும்

20 எம்பிக்கள் கொண்ட என்சிபிஐ குழுவை பொறுத்தவரை, குறைந்தது 14 பேர் இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்நிலையில், 17 பேர் ஒன்றாக பாஜகவில் இணைவதன் மூலம் சட்டரீதியான சிக்கலை தவிர்க்க முடியும் என அவர்கள் கருதுவதாக பாசுனியா தெரிவித்துள்ளார். எனினும், அந்த 20 பேரில் மூன்று எம்பிக்கள் மட்டும் நேரடியாக பாஜகவில் இணைய மாட்டார்கள் என்றும் பாசுனியா கூறியுள்ளார். அபு தாஹிர் கான், கலீலுர் ரஹ்மான் மற்றும் யூசுப் பதான் ஆகிய மூன்று எம்பிக்களும் பாஜகவில் சேராமல், வெளியில் இருந்து என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அல்லது பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பாசுனியா குறிப்பிட்டுள்ளார். தங்களது தொகுதிகளில் நிலவும் அரசியல் மற்றும் நிர்வாக சூழ்நிலைகளே அவர்கள் நேரடியாக பாஜகவில் இணையாமல் இருப்பதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னணி

கடந்த ஜூன் 14ஆம் தேதி, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 20 அதிருப்தி எம்பிக்கள் முன் பின் தெரியாத என்சிபிஐ கட்சியுடன் இணைந்தனர். இதன் மூலம் ஓவர் நைட்டில் பெயர் தெரியாத கட்சியில் இருந்து நாடாளுமன்றத்தில் 3வது மிக பெரிய கட்சி என்ற அந்தஸ்தை என்சிபிஐ பெற்றது. மேலும், அவர்கள் என்டிஏ அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில் தான் தற்போது அந்த குழுவில் உள்ள 17 பேர் பாஜகவுக்கு செல்ல இருப்பதாக பாசுனியா கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *