நீங்கள் எத்தனையோ கோயிலுக்குப் போயிருக் கலாம். அங்கே ஆரத்தி காட்டப்படும் சமயத்தில் கண்களை மூடிக் கொண்டோ அல்லது திறந்துகொண்டோ சுவாமியிடம் வேண்டியிருக்கலாம். எந்தக் கோயிலிலாவது அந்தமாதிரி சமயத்தில், பகவான் உங்களைத் தன் கண்களைத் திறந்து பார்த்தது உண்டா?
பார்த்திருக்கிறார் என்று சொன்னீர்கள் என்றால், நீங்கள் நெற்குன்றத்தில் இருக்கும் கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை என்று சொன்னவர்கள், நயனங்களைத் திறந்து பார்க்கும் பெருமாளை தரிசிக்க இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் எதுவாகவும் இருக் கலாம். அதை நீங்கள் இந்தப் பெருமாளின் சன்னதியில் நின்று வேண்டும்போது, “கவலைப்படாதே… நான் உன்னைக் கண் திறந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!” என்பதுபோல் நிச்சயம் பார்ப்பார், அதை நிதர்சனமாக நீங்களே பார்க்கலாம். அதற்கு முன் கோயிலின் புராணக் கதை கொஞ்சம்.
ஆதிமூலமே!
“ஆதிமூலமே காப்பாற்று!” பூலோகத்தில் அவர் வருவதற்குள், நாம் அந்த யானை யார் என்பதைப் பார்த்துவிடுவோம். அச்சுதன் மேல் அளவற்ற பக்தி கொண்டவன், அரசன் இந்திரத்யும்னன். அவன் பெயருக்கு இந்திரனைவிட மேலானவன் என்று அர்த்தம். அழகு, வீரம், தீரம், பொன், பொருள் என்று எல்லாவற்றிலும் மேலானவன்.
ஆனால், மண், பெண், பொன் என்று எதிலும் பற்று இல்லாமல், பரந்தாமன் திருவடிகளைப் பற்றிக்கொண்டு, பூஜை, புனஸ்காரம் என்றே இருந்தான் மன்னன்.
எல்லாம் நல்லபடியாகவே நடந்தால் எப்படி? கர்ம வினைப்படி ஏதாவது பிரச்னையும் வந்தாகவேண்டுமல்லவா? மன்னனுக்கும் வந்தது. அன்றைய தினம் பூஜைகளை முடித்துவிட்டு, ஆசுவாசமாக அமர்ந்திருந்தான், அரசன். அந்த சமயத்தில் அவனைப் பார்ப்பதற்காக வந்தார், மாமுனிவர் துர்வாசர்.
தன்னை யார் தேடிவந்தாலும் இன்முகத் துடன் வரவேற்கும் இந்திரத்யும்னன், துர்வாசரை வரவேற்பதில் ஏனோ அசட்டையாக இருந்தான். இருக்கையை விட்டு எழுந்திருக்கக் கூட செய்யாமல், சும்மா தலையை மட்டும் அசைத்தான். பரவாயில்லை என்று பொறுத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டார் முனிவர். அப்போதும் மன்னன் எழுந்திருக்கவேயில்லை.
சினத்தின் உச்சத்துக்குப் போனார், துர்வாசர். சபித்தார். “மத யானை போல இப்படி மந்தித்து இருக்கும் நீ காட்டு யானையாக மாறி, வனத்தில் திரிவாயாக!”
இடிவிழுந்ததுபோல் இருந்தது இந்திரத்யும்னனுக்கு, முனிவர்கள் சாபமிட்டால் இட்டதுதான். வேறு வழியில்லை. அதனால், அவரது திருவடியிலேயே விழுந்தான், விமோசனம் கேட்டான்.
கோபம் தணிந்தார், துர்வாசர். “வனத்தில் திரியும் நீ எப்போது குன்றாக நெல் குவிந்திருக்கும் இடத்துக்குச் செல்கிறாயோ அப்போது உனக்கு சாபவிமோசனம் கிட்டும் சொன்னார். மன்னன் யானையாகி அலையத்தொடங் கினான். பூர்வ ஜன்ம வாசனையால் தினம் தினம் திருமாலுக்கு பூஜை செய்தான். அந்த யானைதான் இப்போது அலறியது. அதற்குக் காரணம்? ஒரு முதலை.
முதலை
கஜத்தின் காலைப் பிடித்து இழுத்த அந்த முதலை, நிஜத்தில் ஒரு கந்தர்வன். கூகூ என்ற அந்த கந்தர்வன் ஒரு சமயம் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தான். அப்போது அதே குளத்துக்கு சந்தியாவந்தனம் செய்ய வந்தார் அகத்தியர். கந்தர்வனின் விதி விளையாட, அதனை அறியாமல் அகத்தியரை விளையாட்டாக நீருக்குள் பிடித்து இழுத்தான்.
சினந்த குறுமுனிவர், சட்டென்று சபித்தார் “முதலை போல நீருக்குள் மறைந்து இருந்து என்னை இழுத்த மூடனே, நீ முதலையாகவே மாறிப்போ!”
முதலையாக மாறி, நிஜமாகவே கண்ணீர் வடித்தான் கந்தர்வன். மனம் இளகி, “பரந்தாமன் பக்தன் ஒருவனின் காலை நீ பற்றுவாய் அப்போது உன் சாபம் நீங்கும்’ தமிழ் முனி சொல்லிவிட்டுப் போனார்.
நெல் பொழில் குன்றம்.
காட்டுக்குள்ளேயே திரிந்த யானை, ஒருசமயம் குன்றுபோல குவியல் குவியலாக நெல் குவித்துவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தது. அந்த இடத்தின் அருகே அழகான குளம் ஒன்றில், கமல மலர்கள் பூத்துச் சிரிப்பதைப் பார்த்தது. ‘ஆஹா… கமலக் கண்ணனுக்கு இன்று கமல மலர்களால் பூஜை செய்யலாம்!” மனதுக்குள் நினைத்தபடி தடாகத்துக்குள் இறங்கியது. பூவைப் பறித்தது. அடுத்த நொடி அதன் காலில் விழுந்த கடியால், அதன் கால்கள் தடதடத்தன.
குனிந்து பார்த்த யானை, அரண்டுபோனது. காரணம், அதன் காலைப் பற்றியிருந்தது பிரமாண்டமானதோர் முதலை. முதலை கூகூ யானை இந்திரத்யும்னன் என்று புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆனையைக் காத்திட அதி வேகமாக வந்த பகவான், தமது சக்கரத்தால் முதலை கூகூ வுக்கு முக்தியளித்தார். பகவானின் பக்தனுடைய பாதத்தைப் பற்றியவன் அல்லவா? அதனால், உடனடியாகப் பரமபதம் அவனுக்கு இதுவரை பலருக்கும் தெரிந்ததுதான். அப்புறம்?
ஆனை இந்திரத்யும்னன், பகவானின் தரிசனம் கிடைத்ததும் சாபம் நீங்கி சுய உருவுக்கு வந்தான். முதலை பற்றியதால், அவன் காலில் இருந்து ரத்தம் பெருகி வழிந்துகொண்டே இருந்தது. அதைக் கண்ட பெருமாள் சில விநாடிகள் அவனையே உற்றுப் பார்த்தார். அவ்வளவுதான், காயம் மாயமாகி மகிழ்வுடன் பணிந்தான் மன்னன்.
“கரியாக இருந்த என்னைக் காத்திட வந்த ஹரியே, தாங்கள் இங்கே வரம்தரும் ராஜனாக என்றென்றும் கோயில்கொண்டருளவேண்டும்! என்னைப் பார்த்தது போலவே பக்தர்களையும் பார்த்து அருள வேண்டும்!” வேண்டினான். அடியவர் கேட்டால் மறுப்பாரா நெடியவர்? “அப்படியே ஆகட்டும்!” என்றார். இதோ இன்றைக்கும் நெற்பொழில் குன்றத்தில் கரிவரதராஜ பெருமாளாகக் கோயில் கொண்டருள்கிறார்.
எல்லாம் சரி, அது என்ன நெல்பொழில் குன்றம்?
அதற்கும் காரணம், பகவானின் பக்தர்கள் தான். ஆதியில் இந்தத் தலத்தில் பெருமாளை வழிபடும் பக்தர்கள் ஏராள மானோர் இருந்தார்கள். அவர்கள் அனுதினமும்திருமாலின் திருப்புகழைப் பாடி பஜனைகள் செய்தவண்ணம் ஊரை வலம் வந்தார்கள். அப்படி அவர்கள் ஊர்வலம் வந்ததால், அங்கே பகவானின் அருள் நிறைந்து இருந்தது. நெல் நிறைந்து குன்றுபோல் குவித்து வைக்கும் அளவுக்கு அங்கே செழிப்புடன் இருந்தது. அப்போது இப்பகுதியில் பெரிய கோயில் இல்லாததால், மாதம் ஒருமுறை காஞ்சிபுரம் சென்று அங்கே கோயில்கொண்டருளும் வரதராஜ பெருமாளை சேவித்து வந்தார்கள் பக்தர்கள்.
ஆனால் ஒருசமயம் அதற்கும் சோதனை வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் தொடர்ந்து பெய்த மழையால் ஊரே வெள்ளக்காடாகி மிதந்தது. குவித்து வைத்திருந்த நெல் எல்லாம் அடித்துக்கொண்டு போனது. நாளை விடியுமா? வெள்ளம் வடியுமா என்று தவித்துக் கிடந்தார்கள் எல்லோரும். அந்த சமயத்திலும் அவர்கள் மனதுக்குள் ஒரு பெருங்கவலை சூழ்ந்தது. அது, வரதனை வழிபடச் செல்ல இயலவில்லையே என்ற வாட்டம். அதனால், பாகவத பக்தர்கள் எல்லோரும் கூடினார்கள். ஒரே குரலில் ‘வரதா… வரதா!” என்று அழைத்தார்கள். பக்தர்கள் கூப்பிட்டால்தான் உடனே கேட்குமே பகவானுக்கு? சட்டெனப் புறப்பட்டார். அதேசமயம், பொன்மகளும் பூமகளும் வந்தார்கள். “சுவாமி, எப்போதும் பக்தர்களுக்கு தரிசனம் தர நீங்கள் மட்டுமே செல்கிறீர்களே, இந்த முறை நாங்களும் வருகிறோமே!” எனக் கேட்டார்கள்.
“சரி” என்றார், சக்ரதாரி.
பாகவத பக்தர்களைப் பார்க்க அவசர அவசரமாக வந்தார். அவரைச் சுமந்துகொண்டு கருடன் வந்த வேகத்தில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நெல் எல்லாம் திரண்டது, மழைபோலப் பொழிந்தது. மறுபடியும் குன்றுபோல நிறைந்தது. அந்த நெல் குன்றின் மேல், இருதேவி உடன் இருக்க கருடவாகனராக எழுந்தருளினார் பெருமாள். கனமழையால் எங்கும் காரிருள் சூழ்ந்திருக்க, பெருமாள் தமது திருவிழிகளைத் திறந்தார். ஒருவிழி சூரியன், மறுவிழி சந்திரன் அல்லவா? அதனால், எங்கும் பேரொளி பரவியது. அந்த வெளிச்சத்தில் பெருமாளைப் பார்த்தார்கள், பக்தர்கள். பெருமாளும் பக்தர்களைப் பார்த்தார்.
அந்த நெல்பொழில் குன்றம் தான் இன்று நெற்குன்றம் ஆகியிருக்கிறது.அந்த நெல்பொழில் குன்றம் தான் இன்று நெற்குன்றம் ஆகியிருக்கிறது. விக்ரமாதித்த மன்னனின் ஆட்சிக் காலத் திற்குப் பின் வந்த சாலிவாகன மன்னன் பெரு மாளின் இந்த சரித்திரத்தைக் கேட்டறிந்தான். உடனடியாக ஒரு கோயிலைக் கட்டினான். அதில் பெருமாளின் திருமேனியில் ஓர் அற்புதம் தெரியும்படி அமைத்திட உத்தரவிட்டான். அதன்படி,சாதாரணமாகத் தெரியும் பெருமாளின் திருமுகத்தில், தீபத்தின் வெளிச்சம் படும்போது நயனத்தில் கருமணிகள் அசைவதுபோல் தெரியுமாறு நயமாக அமைத்தார்கள் சிற்பிகள். பெருமாள் தன் பக்தர்களைப் பார்ப்பதுபோல் அமைந்த அந்தச் சிலையைப் பார்த்து சந்தோஷித்தான், சாலிவாகனன்.
பகவான் இதோ இப்போது நீங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றாலும் உங்களைப் பார்ப்பதுபோன்ற திருக்காட்சியை நீங்கள் காணலாம். கருவறையில் ஆரத்தி காட்டும் சமயத்தில், வேறு வெளிச்சம் வரக்கூடாது, என்பதற்காகவே வித்தியா சமான அமைப்பினைச் செய்திருக்கிறார்கள். மூலஸ்தானத்தை முழுவதுமாக மூடக்கூடாது என்பது ஐதிகம் என்பதால், கண்ணாடியால் கதவு அமைத்து அதனை மூடும்படி திரையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். பெருமாளுக்கு ஆரத்தி காட்டும் சமயத்தில் மட்டும் திரையினை மூடுகிறார்கள். தீப ஒளி காட்டப்படும் அந்த சமயத்தில் கண்களை மூடிக்கொள்ளாமல், கவனமாகப் பாருங்கள். பெருமாள் கண் திறந்து உங்களைப் பார்ப்பதை நீங்களே பார்ப்பீர்கள்.
ஆடம்பரம் எதுவும் இன்றி வெறும் பெயர்ப்பலகை மட்டும் தாங்கிய முகப்பைத் தாண்டியதும், ஐஸ்வர்ய கணபதி அழகாகக் காட்சிதர அவரைப் பணிந்து, பலிபீடம் கொடிமரம் கடந்து சென்றால், மேற்குப் பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில், புண்யகோடி விமானத்தின் கீழ், ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக சேவைசாதிக்கிறார், கரிவரதராஜபெருமாள். இவர்தான் கண்திறந்து பார்க்கும் பெருமாள்.
உற்சவர் சத்யநாராயணர், கதை, பத்மம் தாங்கி வித்யாசமான வடிவில் அருள்கிறார். உற்சவர் தாயார், நவநீத கிருஷ்ணன், சுதர்சனாழ்வார் கருடன் ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் இருக்கின்றன. மழலைபாக்யம் பெறவேண்டிடும் தம்பதியர், நவநீத கிருஷ்ணனை மடிதாங்கி வணங்குகிறார்கள். பிராகாரத்தில் பெருந்தேவி தாயார் தரிசனம் கிடைக்கிறது.
வெள்ளிக் கிழமை மாலையில் இங்கே தாமரைப் பூவினால் விசேஷ பூஜை நடக்கிறது. (கஜம், கமல மலரால் பூஜை செய்த தலம் அல்லவா?) அன்றையதினம் வேண்டுதலோடு இங்கே வரும் பெண்கள், தாமரைப் பூவுக்குள், நாணயம் ஒன்றினை வைத்து, தாங்களே குங்கும அர்ச்சனை செய்து, பெருந்தேவி தாயாருக்கு ஆரத்தியும் காட்டுகிறார்கள். இதனால், குடும்பத்தில் நிம்மதி நிலவும், சகல ஐஸ்வர்யமும் சேரும், எல்லா வேண்டுதல்களும் ஈடேறும் என்பது நம்பிக்கை.
(இந்த பூஜையில்தான், தாமரை மலர்களில் இந்த இதழுடன் இணைப்பாகத் தரப்பட்டுள்ள கஜ கனக குபேர மகாலக்ஷ்மி காசு நிறைத்துவைக்கப்பட்டு, உங்கள் பெயராலேயே விசேஷமாக பூஜிக்கப் பட்டது. அந்தக் காசு உங்கள் வீட்டில் இருந்தாலே, சகல ஐஸ்வர்யமும் சேரும்) பெருமாளை தரிசித்த வண்ணம் கருடன் சன்னதி இருக்க, வரத ஆஞ்சநேயர் ராமானுஜர், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனி சன்னதிகளும் உள்ளன. தலமரம் அத்தி என்பதால், பெருமாளுக்கு அத்தி வரதர் என்ற பெயரும் உண்டு. (அத்தி என்றால் யானை என்ற அர்த்தமும் உண்டு. ஆனையைக் காத்தவர் என்பதாலும் இவர் அத்தி வரதர். காஞ்சிபுரத்தில் இருந்து வந்து காட்சி தந்தவர் என்பதால், இவரை தரிசித்தால் அங்கே உள்ள அத்தி வரதரை தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம்)
பாஞ்சராத்ர ஆகத்தின்படி இத்தலத்தில், வைணவத் திருத்தலங்களுக்கே உரித்தான எல்லா விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நேரமும் வாய்ப்பும் அமையும்போது நீங்களும் நெற்குன்றம் சென்று, கரிவரதராஜரை தரிசியுங்கள். பகவானின் பார்வை உங்கள் மீது பதியும். அதன் பலனாக உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் பரிபூரணமாக நிறையும்.
ஜெயாப்ரியன்
படங்கள்: கஸ்தூரி

