கதை எங்கே? காட்சிகள் மட்டுமே! யாஷின் ‘டாக்ஸிக்’ எப்படி? – Kumudam

Spread the love

குமுதம் விமர்சனக் குழு

ஒரு கதை… அதை விளக்க காட்சிகள்… படுத்த சுவாரஸ்யப் திருப்பங்களுடன் ஒரு திரைக்கதை… ஆச்சரியப்படுத்த ஒரு ஓப்பனிங் ஸீன், ஒரு இன்டர்வெல் பிளாக்… எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ்… பொழுதுபோக்கு சினிமாவின் எலும்புக்கூடு இதுதான்..! ஆனால், எலும்பே இல்லாத ஒரு போன்லெஸ் சினிமாவை முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ். கொஞ்சம் காஸ்ட்லி எக்ஸ்பிரி மென்டேஷன்…

அதிகாரம், பணம் இரண்டும் இருந்தால் உலகமே உன் காலடியில் அதை வைத்து உன் மனம் அடைய நினைப்பது இரண்டே இரண்டு தான்… மது போதை, பெண் म… இரண்டும் கிடைக்கும், நீ பயமில்லாதவனாக இருந்தால்…

நீ பயம் இல்லாதவனாக இருக்க வேண்டும் என்றால், உன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் பயமுறுத்த வேண்டும்… வீரம் பயத்தில் இருந்துதான் பிறக்கிறது… பயமில்லாதவனின் உயிர் அவன் கையில் இல்லை… அவனது கடிகாரமும்தான்… சமூகத்தில் சரி, தவறெல்லாம் எதற்கு?

இயக்குநர் கீது மோகன்தாஸ் சொல்ல வந்தது இதுதான்.. சொல்ல வந்த விதம் சம்பவங்களாகவோ, காட்சிகளாகவோ இல்லை… தோன்றி மறையும் பிம்பங்களாக… வாழ்க்கையில் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள ஒன்றுமில்லை என்பதுபோல், தெளிவற்ற வாழ்க்கை பற்றி ஒரு தெளிவில்லாத மனநிலையைத் திரையில் உருவாக்க முயன்றிருக்கிறார்.

வாழ்க்கை அப்படித்தான். ஆனால், சினிமா அப்படியல்ல. அதீத மனநிலை பொது புத்தியோடு ஒத்துப்போவதில்லை. படம் பார்த்தவர்கள் கதையே இல்லைன்னு சகட்டுமேனிக்குத் திட்டுகிறார்கள். ஆனால், எதையோ கொன்று தணிந்த கோபம் கீது மோகன்தாஸ் திரைக்கதையில் தெரிகிறது. ஆண்களுக்கு விதவிதமான மரண தண்டனைகள்…

பாவம், யாஷ் மதம் கொண்ட யானையாகத் திரையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்… இந்த கேரக்டரை அவர் ஆயுளுக்கும் மறக்கமாட்டார். யாஷ் தவிர ஆண் கதாபாத்திரங்கள் அடையாளம் தெரியாத பிணங்கள்.

நயன்தாரா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா எனப் பிரதான பெண் கதாபாத்திரங்கள் நன்கு சமைக்கப்பட்ட மாமிசத் துண்டுகள். நயன்தாரா முதிர்ச்சியான தங்கையாக வந்து முக்கியமான காட்சிகளில் இருந்து தப்பித்துக் கொண்டார். ஆனாலும், காஸ்ட்யூமர்கள் அவர் பங்குக்கு கலக்கியிருக்கிறார்கள்…

இருட்டுக்குள் வெளிச்சத்தைத் தேடும் ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பு… ஒரேவிதமான கேமரா நகர்வுகள் சலிப்பு.. ஆயிரம் டீசர், ட்ரெய்லர்களைக் கோத்து முழுப் படமாக்கியிருக்கிறார் எடிட்டர். இசை சிறப்பு ஒலி… பாடல் காட்சி கள் சங்கீதக் கொலைகள்… ஆக்ஷன் காட்சிகள் கடின உழைப்பு. வசனங் கள் யூடியூப் ரீல்ஸ் தத்துவங்கள்…

யாஷின் மகனாக வரும் மாய பிம்பம் சராசரி ரசிகனுக்கு குழப்பம் என்றாலும், அது ஒன்றுதான் முழுப் படத்தில் மனதில் நிற்கிறது. காரணமில்லாத கொலைகளின் காரணங்களே புரியாதபோது, தனிமனித வன்முறையின் நீட்சியே போர்கள் என்று கிளைமாக்ஸில் கிளாஸ் எடுப்பதெல்லாம் யாருக்குப் புரியும்? அகிரா குரோசாவா, ஆண்ட்ரே தார்கோவஸ்கியாகத் தன்னை அடையாளப்படுத்த நினைத்த கீது மோகன்தாஸை ரசிகர்கள் சிறுத்தை சிவா லிஸ்ட்டில் சேர்த்திருப்பது பரிதாபத்துக்குரியது; தவிர்க்க முடியாதது.

கோவாவிற்கு ஏன் சுதந்திரம் லேட்டாக வந்தது என்ற கேள்வி யுடன் இந்தப் படம் ஏன் துவங்கு கிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *