கதை மறந்தாலும் பாடல் மறக்கவில்லை… ரசிகர்களை கட்டிப்போட்ட இளையராஜா ஹிட்! – Kumudam

Spread the love

படம் OUT…பாட்டு HIT..!  – வி.ராம்ஜி

சில படங்கள் மனதுக்கு நெருக்கமாக இல்லாதபோதும் கூட, அந்தப் படத்தின் பாடல்கள் நம்முள் இரண்டறக் கலந்துவிடும். ‘படம் டப்பாதான். ஆனா பாட்டெல்லாம் டாப்பு’ என்று இன்னமும் பாட்டுக்குள் முத்தெடுத்துக் கொண்டிருப்போம். அப்படியொரு படம்… ‘ஒரு ஓடை நதியாகிறது’.

எத்தனையோ படங்கள் பார்த்திருப்போம். அதேபோல ஏகப்பட்ட பாடல்கள் கேட்டிருப்போம். ஆனாலும் நம் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பாடல், காலங்கள் கடந்தும் நம்மை முணுமுணுக்க வைத்திருக்கும்!

தமிழ் சினிமாவின் மரபுகளையெல்லாம் உடைத்துப் போட்டு, புது இலக்கணம் படைத்த இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய படங்களில் ‘ஒரு ஓடை நதியாகிறது’ என்கிற படமும் ஒன்று. கருப்பு வெள்ளை காலம் முதல் எண்பதுகள் வரை எத்தனையெத்தனையோ சொல்லத் தயங்குகிற உணர்வுகளைக் கூட பொளேரென்று சொன்ன ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம்.

செம  மழை. இரவு வேளை. பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது மழை. விருந்துக்குச் சென்றுவிட்டு, முழு போதையில் மிதந்தபடி, வந்துகொண்டிருக்கிறான் ஹீரோ. வழியில், மழையில் நனைந்தபடி இருக்கிற பெண்ணைப் பார்க்கிறான். இருட்டு, காற்று, மழை… கூடவே இளம்பெண்! அவளை பாலியல் வன்கொடுமை செய்கிறான்.

பின்னர், நொறுங்கிப் போனவள் தந்தையுடன் கிளம்பி வேறு ஊருக்கு வருகிறாள். அங்கே அவளுக்கு குழந்தை பிறக்கிறது. இதனிடையே, அந்தப் பெண்ணைத் தேடுகிறான் நாயகன். ஆனால் அவள் கிடைக்கவில்லை. மது போதையில் செய்ததை குற்றமாக எண்ணுகிறான். குற்ற உணர்ச்சியாக அவனுக்குள் குத்திக்கொண்டே இருக்கிறது மனசாட்சி!

இதையடுத்து, சினிமா பாஷையில் சொன்னால் உருண்டோடுகிறது. வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவருகிறான். அந்தப் பெண்ணை அவன் பார்த்தானா, மகனை அடையாளம் கண்டுகொண்டானா, அந்தப் பெண் அவனைச் சந்தித்தாளா, அவனுடைய மனைவிக்கு இவையெல்லாம் தெரிந்ததா என்பதுதான் கதை!

’ஏழாவது மனிதன்’ படத்தில் அறிமுகமான ரகுவரன் இதில் நாயகன். அநேகமாக, இரண்டாவது அல்லது மூன்றாவது படமாக இருக்கலாம். இவரின் நடிப்புத் திறன் கண்டு வியந்துதான், ஸ்ரீதர் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டார் போலும். கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார்தான்! ஆனாலும் ஓடை நதியாகாமல், குட்டையாகிப்போனதுதான் சோகம்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நாயகி சுமலதா. அதேபோல், ரகுவரனின் மனைவியாக மனோசித்ரா. டி.எஸ்.பாலையாவின் மகள். பாலையாவின் மீதான அன்புக்காக, அவரின் மகளுக்கு திரையுலகில் பாதையை அமைக்க நினைத்து, அவரை இரண்டாவது நாயகியாக்கியிருக்கிறார் ஸ்ரீதர். ஆனால் ஓடையில் ஓடமும் இல்லை; ஓடையில் நீரும் இல்லை!

வைரமுத்துவும் கங்கை அமரனும் பாடல்களை எழுத இளையராஜா இசையமைத்தார். 83ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். படத்தின் ஆரம்பக் காட்சி, மழை, நாயகன் நாயகியை பலாத்காரம் செய்வது… எல்லாமே ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை நினைவுபடுத்தியிருக்கலாம் ரசிகர்களுக்கு. ’நிழல் நிஜமாகிறது’ ஷோபா, சரத்பாபு கேரக்டர்கள், ‘நூல்வேலி’ சரத்பாபு, சரிதா கேரக்டர்கள் என்பது உள்ளிட்ட படங்கள் நினைவுக்கு வந்திருக்கலாம்.

அல்லது அந்த அளவுக்கு அழுத்தமான, தாக்கம் தரக்கூடிய வகையில் கதாபாத்திரங்கள் சித்திரிக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. சாலையில் சென்றுகொண்டிருக்கும் நூறுபேரை வயது வித்தியாசம் இல்லாமல் நிறுத்திவைத்துக் கேட்டால், அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தால், அதில் இளையராஜா ஹிட்ஸ் என்று ஃபோல்டர் இருக்கும். அந்தப் பட்டியலில், ‘தலையைக் குனியும் தாமரையே…’வும் இருக்கும்.

’கனவு ஒன்று தோன்றுதே… இதை யாரோடு சொல்ல… விழியோரங்கள் மிக சூடாக எதிர்பாராமல் சில நாளாக…’ என்ற பாடலும் என்னவோ செய்யும். சரி… தலைகுனியும் தாமரைக்கு வருவோம்!

’தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே…
என்ற பாடலில், வயலின் குழையும். அந்தக் குழைவில் காதல் பூப்பூக்கும்.
‘நீ தீர்க்கவேண்டும் வாலிப தாகம்
பாற்கடலின் ஓரம் பந்திவைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து’

என்று தாமரையே வெட்கப்படும் விதமாக, தலைகுனிந்துகொள்ளும்விதமாக, காமத்தை கவிதையாகச் சொல்லியிருப்பார் வைரமுத்து.’அமுதம் வழியும் இதழைத் துடைத்து விடியும் வரையில் விருந்து நடத்து’ என்கிற வரிகளில் எண்பதுகளின் இளைஞர்களும் யுவதிகளும் முகம் சிவக்க வெட்கப்பட்டுத்தான் போனார்கள். ஓரக்கண்ணால் பார்த்து காதல் வளர்த்தார்கள்.

இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக, வயிலினில் இளையராஜா வித்தை காட்டுவார். விளையாடுவார். கொஞ்சுவார். காதலர்களின் ஊடலைச் சொல்லும் இசையாக விருந்து பரிமாறுவார்.

‘பூவாடைக் காற்று ஜன்னலைச் சார்த்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

என்று காமத்துக்குள் கவிதையை, கவிதைக்குள் காமத்தை சங்கமிக்கச் செய்திருப்பார் வைரமுத்து. ’வாடைக்காற்றாக வீசுகிறது ஜன்னலைச் சார்த்தச் சொல்கிறாள்’ நாயகி. உடனே குதூகலமாகிவிடுகிற ஆண், ‘உத்தரவு தேவி’ என்று அடிமையாகிவிடுகிறான். ‘இரண்டு நதிகள் இணைந்து நடக்கும் புதிய அலைகள் கரையை உடைக்கும்’ என்று இரண்டுபேரையும் இரண்டு நதிகளுக்கு நிகராகச் சொல்லியிருப்பார் வைரமுத்து!

‘தலையைக் குனியும் தாமரையே’ பாடலில் எஸ்.பி.பி.யும் உமாரமணனும் குரலில் காதலைக் குழைத்து அமுதென செவிக்குத் தந்திருப்பார்கள். இளையராஜாவின் மெட்டு, வாத்தியக்கட்டுமானங்கள் இணைந்து நம் உயிரின் புள்ளியைத் தொட்டு, கோபதாபங்களை, குரோதவிரோதங்களையெல்லாம் செருப்பைப் போல கழற்றிவிட்டு, பூக்களின் நறுமணங்களை நாசியை நிமிண்டு என்னவோ செய்யும்

’தலையைக் குனியும் தாமரையே’ பாடலையும் அதன் வரிகளும் இசையுமான சங்கமித்தலையும் கேட்டுப்பாருங்கள். இதுவரை காதலிக்காதவர்களையும் குஷிப்படுத்தும்; காதலிப்பவர்களை ‘பிரேக் அப்’ சொல்லாமல், பிணைத்திருக்கச் செய்யும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *