‘கரூர் கம்பெனியை வெளியேற்றுங்கள்’. ஸ்டாலினிடம் கொந்தளித்த கோவை தி.மு.க. நிர்வாகிகள்! – Kumudam

Spread the love

‘செயல் புயல் செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்துமே உங்களால் உருப்பட முடியவில்லை என்றால் கோவை மாவட்டக் கழகமே வேஸ்ட்! என்று ஸ்டாலின் சாபமிட, ‘கரூர் கம்பெனியை வெளியேற்றினால் விளங்கிடுவோம் தலைவரே!” என்று நிர்வாகிகள் எதிர்ப்பாட்டு பாடியிருப்பதால் அதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுள்ளது அறிவாலயம்!

என்னதான் பிரச்னை? கோவை மாவட்ட தி.மு.க. சீனியர்களிடம் விசாரித்தோம். ‘தேர்தல்களில் தொடர்ந்து ஜூரோ வாங்கி வைத்திருக்கும் கோவை மாவட்டக் கழகத்தை தூக்கி நிறுத்தத்தான் செந்தில்பாலாஜியை பொறுப்பு அமைச்சர், மாவட்டப் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர் என முன்னிலைப்படுத்தினார் ஸ்டாலின். யாரை மாவட்டச் செயலாளராக போட்டாலுமே வீம்பு காட்டும் கோவை மாவட்ட நிர்வாகிகள்கூட தொடக்கத்தில் பாலாஜியிடம் மிகவும் அன்பைக் காட்டினார்கள். ‘எப்படியும் கட்சியை வலுவாக்கி, நம்மையெல்லாம் சிறப்பான பதவிகளில் அமரவைப்பார்’ எனவும் நம்பினார்கள்.

அதற்கேற்ப, கோவையை தன் கையில் எடுத்த சில நாட்களிலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியை கழகத்துக்கு தந்து, தான் யாரென்று நிரூபித்தார் பாலாஜி. அதே வைப்ரேஷனோடு மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள் நியமனத்தில் அவர் காட்டிய வேகத்தால், கோவை மாநகராட்சி தி.மு.க.வி.ல் கடும் கொந்தளிப்புகள், சர்ச்சைகள். குறிப்பாக, உழைத்தவர்களுக்கும் செலவழித்தவர்களுக்கும் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

இதற்கிடையே, கோவையின் சந்துபொந்தெல்லாம் தனது கரூர் கம்பெனி ஆட்களை கொண்டு நிறைத்தார் பாலாஜி. பார் முதல் எல்லா வகையிலான வருமான வழித்தடங்களையும் இவர்கள்தான் ஆக்ரமித்தார்கள். இது சம்பாதிக்கும் கனவிலிருந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சி. கடந்த ஆட்சியின்போது ஸ்டாலினோ அல்லது உதயநிதியோ கோவைக்கு வரும்போது ஒவ்வொரு முறையும் ஏதோ மாநாடு வரவேற்புபோல் கூட்டத்தைக் கூட்டுவார் பாலாஜி. ஆனால் இதில் கோவை மாவட்டக் கட்சியினர் ஐந்து பைசா செலவு செய்ய தேவையும் இருக்காது. அதேவேளையில் முன்னின்று தலைவரோடு புழங்கும் வாய்ப்பும் இருக்காது. அதாவது, கரூரைப் போலவே கோவை மாவட்ட திமுகவின் முகமாகிப்போனார் பாலாஜி. அவரைத் தாண்டி கோவையின் பாரம்பரிய திமுக. முகங்கள் அனைத்துமே மங்கி மறைந்தன.

இந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சிறையில் இருந்தார் பாலாஜி. ஆனாலும் கோவை தொகுதியில் அவரது செலக்ஷனான ராஜ்குமார் தான் வேட்பாளர். அதிமுகவிலிருந்து தாவி வந்த சில காலத்திலேயே அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு தரப்பட்டது. கோவையின் பாரம்பரிய திமு.க. நிர்வாகிகளை கொதிக்கவைத்தது. ஆனால் எந்த பலனுமில்லை. வெற்றிபெற்ற ராஜ்குமார் இப்போதுவரை திமுகவினரோடு கலக்கவில்லை.

கூல் இதற்கிடையே, ‘பாலாஜியை பண்ணினால் சீட் கிடைக்கும். கான்ட்ராக்ட் கிடைக்கும்’ என்று பம்மி இருந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் அப்படி எதுவும் நடக்காததால் அவருக்கு எதிர் திசையில் செயல்படத் துவங்கினார்கள். பெயருக்கு பூத் கமிட்டியெல்லாம் அமைத்தாலுமேகூட ‘நமக்கு சீட் கிடைக்கலேன்னா வெற்றிக்கு ஒத்துழைக்கவே கூடாது’ என ரகசியத் தீர்மானமும் போட்டார்கள். இவையெல்லாம் பாலாஜிக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் 2026 பொது தேர்தலில் தனக்கு தோதான நபர்களுக்கே சீட் கொடுத்தார். குறிப்பாக, செந்தமிழ்ச்செல்வன் எனும் இளைஞரை மாவட்டச் செயலாளராக்கி, கோவை வடக்கில் சீட்டும் கொடுத்தார். கோவையின் பத்து தொகுதிகளில் மூன்றை கூட்டணிக்கு தள்ளிவிட்டார். தி.மு.க.வினர் கொந்தளித்துப்போனார்கள். ஆனாலும், எந்த பலனுமில்லை.

மேட்டுப்பாளையத்தில் சண்முகசுந்தரத்துக்கு சீட் கொடுக்காததும், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூரை காங்கிரஸுக்கு கொடுத்ததும், வடக்கில் வலுவான வேட்பாளரை நிறுத்தாததும் பாலாஜி செய்த தவறுகள், மேலும், கோவை மாவட்டத் தேர்தல் பணிகளில் கரூர் நபர்களையே நியமித்தாரே தவிர உள்ளூர் நிர்வாகிகளை பட்டும் படாமலுமே பயன்படுத்தினார். இதனால் பாலாஜியின் வியூகங்களையும் தாண்டி, கோவையில் பத்து தொகுதிகளில் மூன்றில்தான் தி.மு.க. வென்றது. அதிலும் ஒன்று கூட்டணிக் கட்சியான கொ.ம.தே.க. கோவை தெற்கில் கொட்டிக் கொடுத்தபோதும் பாலாஜியே குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றார். 

ஆக, பாலாஜி இருந்தும் கோவையில் திமு.க எழுச்சியே பெறவில்லை என்பதே உண்மை அதற்காக பாலாஜியிடம் மட்டுமே தவறு என்று சொல்ல முடியாது. சுரூர் புள்ளிகள் மூலமாக வார்டு தி.மு.க.வினரிடம் கொடுத்து மக்களுக்கு விநியோகிக்க சொன்ன ஸ்வீட் பாக்ஸிலிருந்து, பல லட்டுகளை கோவை தி.மு.க.வினர் சிலர் அமுக்கிவிட்டார்கள். கேட்டதற்கு, ‘ஐந்து வருஷமா சம்பாதிக்கவே இல்லை’ என ஓபனாகவே காரணம் சொல்லி திருப்பித் தரவும் மறுத்தார்கள். மேலும் அவரின் கறார் உத்தரவுக்குப் பிறகும் கட்சி வளர்ச்சிக்காக கள செயல்பாடுகள் எதையும் நிர்வாகிகள் செய்யவே இல்லை. இவையெல்லாம் தலைவரிடம் ஆதாரப்பூர்வமாக புட்டுப்புட்டு வைத்துள்ளார் பாலாஜி. கூடவே ‘என்ன சொன்னாலும் திருந்தமாட்டேங்றாங்க.

 நீங்க நினைச்ச ரிசல்ட்டை தரமுடியலை, எனக்கு சுரூரே போதும் தலைவரே என்றும் சொல்லியிருக்கிறார் பாலாஜி, அதன் எதிரொலியாக, கோவை தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் தலைவர் தன் கோபத்தைக் காட்டியிருக்கிறார். அப்போது, ‘தலைவரே. கரூர் கம்பெனியை கோவையிலிருந்து வெளியேத்துங்க. கட்சி நிச்சயம் உருப்பட்டுவிடும்’ என்று கோவை நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி அவர்கள் சொன்னது பாலாஜியையும் சேர்த்தா என்பதுதான் தலைமையின் சந்தேகம் இந்த கலாட்டாக்களுக்கு இடையே கோவை தி.மு.க. முக்கியப் புள்ளிகள் சிலரின் தலைமையில் லோக்கல் நிர்வாகிகள் பலர் விரைவிலேயே த.வெ.க.வில் இணையத் திட்டமிட்டுள்ளனர். முதல்வர் விஜய் கோவைக்கு வரும்போது இணைப்பு விழாவை விமர்சையாக நடத்தும் பிளானும் வைத்துள்ளனர்” என்று போட்டு டைத்தார்கள். செந்தில்பாலாஜி பிடி விலகுகிறதா.. விளக்கம் பெற அவரது செல்போனில் அழைத்தோம். மெசேஜ் அனுப்பினோம். அவர் பதிலளிக்கவே இல்லை.
கண் முன்னால் கரைகிறது கட்சி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *