India
oi-Vignesh Selvaraj
சாம்ராஜ்நகர்: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஹனூர் வனப்பகுதியில் 3 பேரை என்கவுன்டரில் வனத்துறை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூவரின் குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஹனூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் மானை வேட்டையாடிவிட்டு இறைச்சியை பிரிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், ஒருவர் தப்பி ஓடிய நிலையில், 3 பேர் கொல்லப்பட்டதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

ஜகன்னாததொட்டி பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகனான அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஹனூர் வனப்பகுதியில் உள்ள ஷாக்யா அருகே நேற்று இரவு சிலர் சட்டவிரோதமாக வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு மானை வேட்டையாடிய அவர்கள், அதனை பங்கு பிரிக்கும்போது, அந்தப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றதாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் வருவதைக் கண்ட அந்தக் கும்பல் வனத்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு வனத்துறையினரும் தாக்குதல் நடத்தியதாஜவும் இதில், ஒருவர் தப்பியோடிய நிலையில், 3 பேர் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களை வெளியே வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
காணாமல் போன மேய்ச்சல் மாடுகளை தேடியே அந்த 4 பேரும் வனப்பகுதிக்குள் சென்றதாகவும், இரவாகி விட்டதால் அவர்கள் அங்கேயே தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த வனத்துறையினர் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்றுள்ளதாகவும், இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
3 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும், பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.