சென்னை: கடலில் பாலம் கட்டும் திட்டத்துக்கு மீனவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர் கூறியதாவது: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதியில் பாலம் கட்டப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பாலம் கட்டப்பட்டால் 5 ஆயிரம் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வரும் 2050-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மேலும், கடற்கரையில் கட்டுமான பணிகள் மேற்கொண்டால் அது கடல் அரிப்புக்கு வழி வகுக்கும். அத்துடன், கடல் பகுதியில்
பாலம் கட்டினால் கடலில் மீன்பிடிக்க சென்று இரவு நேரத்தில் திரும்பும் மீனவர்களின் படகுகள் பாலத்தின் தூண்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே, இப்பாலம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.