`கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல்; விஜய் தன்னை நிரூபிக்க..!’- தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழிசை

Spread the love

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்திருக்கும் புகார், தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்திருக்கின்றன.

அந்த வரிசையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன் என்றுதானே ஆட்சிக்கு வந்தீர்கள்? ஆனால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன ? பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்தானே நிலவுகிறது. பெண் ஆட்சியருக்கு த.வெ.க எம்.எல்.ஏ ஆபாச செய்தி அனுப்பினார் என்ற தகவல், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து பரவிக் கொண்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

ஆனால் இந்த முதலமைச்சர் அதுகுறித்து வாய் திறக்கவில்லை. எம்.எல்.ஏ ஆபாச தகவல் அனுப்பிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் பதில் இல்லை. பெண்கள் மீது உண்மையிலேயே முதல்வர் ஜோசப் விஜய் மரியாதை வைத்திருந்தால், ஆட்சியருக்கு ஆபாச தகவல் அனுப்பிய எம்.எல்.ஏவை அழைத்து கண்டித்திருக்க வேண்டும் என்பதுடன், அவரை கட்சியில் இருந்தும் நீக்கியிருக்க வேண்டும்.

ப்ரோ… வாட் ப்ரோ… இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எல்லாமே பேட் ப்ரோ… மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது தமிழகத்தின் பழமை சொல். அதன்படி அனைத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும் உங்கள் மௌனத்தை, சம்மதமாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்களா என்று கூறுங்கள் முதல்வர் விஜய் அவர்களே…?

எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கட்சியிலிருந்து நீக்குவதுடன், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டும். இந்த மண் அநியாயத்தையும், ஆபசத்தையும் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுடன் கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல் வந்திருந்தால், பெண்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் முதலமைச்சர் என விஜய் தன்னை நிரூபித்திருக்க முடியும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை ஒரு வாரத்தில் விசாரித்து தேசிய மகளிர் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக பா.ஜ.க சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜய்
விஜய்

அதன்படி கள்ளக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். நடந்த சம்பவத்தை இல்லை என்று மறுக்கும்படி ஆட்சியருக்கு அழுத்தம் கொடுப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அதேபோல ஆட்சியரை இடமாற்றம் செய்யும் முயற்சிகளில் இறங்கினால், கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். உங்கள் கட்சி பூபாலன் மெத்தபெட்டமைன் வைத்திருந்தார். அமைச்சர் காந்திராஜன் நள்ளிரவில் காவல் நிலையம் சென்று காவலர்களை மிரட்டுகிறார். அமைச்சர் விஜய் பாலாஜி பெண் காவல் அதிகாரிகளை வீட்டுக்கு அழைக்கிறார். ஆனால் இந்த விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் மௌனமாக இருக்கிறார். இந்த மௌனங்கள் அபாயகரமானது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *