கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் புதிய திருப்பம்! விசாரணை கோரி என்ட்ரி கொடுத்த NCW ! – Kumudam

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில், தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள ஆணையம், தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி, 7 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யக் கோரியுள்ளது.

என்ன விவகாரம்?

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் – பில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று அத்துமீறி நடந்துகொண்டதாகவும் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியான ஊடகச் செய்தியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யவும், எந்தவித அரசியல் அல்லது வெளிப்புற தலையீடும் இல்லாமல் நியாயமான விசாரணை நடத்தவும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் எந்தப் பதவியில் இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும், பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளை மறுத்த எம்.எல்.ஏ!

இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். இவை வெறும் வதந்திகள் என பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். சரிபார்க்கப்படாத சமூக வலைதள பதிவுகளின் அடிப்படையில் இந்த விவகாரம் பரப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, குற்றச்சாட்டுகள் இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்றும் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் இதுவரை காவல்துறையில் புகார் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் ரீதியாக வெடித்த விவகாரம்!

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த விவகாரத்தை முதலில் எழுப்பிய நிலையில், நவம்பர் 12-ம் தேதி திமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டு, அருள் விக்னேஷ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

தமிழக அரசு விசாரணை நடத்துமா?

மாவட்ட ஆட்சியர் தொடர்பான இந்த விவகாரத்தில் இதுவரை காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. மேலும், தமிழ்நாடு அரசு தரப்பிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட்டு, டிஜிபியிடம் அறிக்கை கோரியுள்ளது.

பெண் அதிகாரியின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் புகார்களின் மீதான நடவடிக்கை குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் கடிதத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன என்பதுதான் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவற்றின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுமா என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *