கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியிருந்தால் துரதிருஷ்டவசமானது! நீதிபதி வேதனை | Chennai HC judge says about kallakurichi MLA obscene message to collector

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

சென்னை: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு, எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியிருந்தது உண்மையென்றால் அது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

kallakurichi

இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளிக்க வேண்டும் என காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிக்கும் உத்தரவிட வேண்டும். டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியிருப்பதாவது: குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கிறீர்கள். எம்எல்ஏ, ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பினார் என்பதை காட்டுவதற்கு ஏதேனும் உறுதியான ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள்.

செய்தித் தாள் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். மாவட்ட ஆட்சியரால் சொந்தமாக நடவடிக்கை எடுக்க முடியாது என நீங்கள் சொல்கிறீர்கள். அவருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அவரே புகார் அளிப்பார்.

அப்படி புகார் ஏதேனும் அளித்திருக்கிறாரா? நிர்வாக ரீதியான புகாராவது இருக்கிறதா? ஆட்சியர் புகார் கடிதம் அனுப்பாத போது காவல் துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஆட்சியர் புகார் கொடுக்காத போது நீதிமன்றமும் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது.

ஆட்சியரிடம் விளக்கம் கேட்க வேண்டும். அப்போது எம்எல்ஏ ஆபாச செய்தி அனுப்பியது உண்மை எனும் பட்சத்தில் அது துரதிருஷ்டவசமானது. ஆட்சியர் தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்துள்ளாரா? அவர் புகார் அளிக்காமல் நான் தலையிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆட்சியர் பத்மஜாவின் கணவர், தலைமைச் செயலாளருக்கு புகார் கடிதம் அனுபப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதி விக்டோரியா கௌரி கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “தொழில் மற்றும் உயர்பதவியில் உள்ள பெண்கள் கூட பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கள்ளக்குறிச்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எம்எல்ஏ பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அது குறித்து அந்த பெண்ணின் கணவர் புகார் கொடுத்திருக்கிறார். இன்று வரை இந்த மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஆண்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களை மதித்து கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். பதவி வேறுபாடின்றி அனைவரும், தொழில்முறை ஒழுக்கத்தையும், பரஸ்பர மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *