கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது.. எஸ்பியிடம் நேரில் புகார் அளித்த கலெக்டர் பத்மஜா | Kallakurichi Collector Row: District Collector Files Formal Complaint With SP Against TVK MLA Arul Vignesh

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) அதிகாரப்பூர்வமாகப் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kallakurichi

ஒரே நாளில் நடந்த அதிரடி திருப்பம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் கடந்த சில வாரங்களாகத் தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். திரிசூலி தாக்கல் செய்த ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு திங்கட்கிழமை (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் (SPP) ஆர். ஜான் சத்யன், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து மாநிலத் தலைமைச் செயலாளர் எம். சாய்குமாருக்கோ அல்லது காவல்துறைக்கோ இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், “மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காதபோது, செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட முடியாது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் தலைமைச் செயலாளரிடமும் மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்திவிட்டு நாளை (நவம்பர் 24) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

எஸ்பி-யிடம் நேரில் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்

உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு “புகாரே வரவில்லை” என்று கூறிய அதே நாளில், திங்கட்கிழமை பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனுவை நேரில் ஒப்படைத்துள்ளார்.

அந்தப் புகாரில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

வழக்கின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

இத்தனை நாட்களாக, “அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை; மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை” என்று ஆளும் தவெக அமைச்சர்களும், அரசுத் தரப்பும் கூறி வந்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியரே நேரடியாக எஸ்பி-யிடம் புகார் அளித்திருப்பது இந்த வழக்கில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மேலும், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, தமிழக டிஜிபி-க்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரியும் பொதுமேடையில் காவல்துறையின் தாமதத்தைக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ள விவரத்தையும், அதன் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் தமிழக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆளும் தவெக அரசுக்கும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கும் சட்ட ரீதியான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *