India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியினர் காங்கிரஸ் கட்சியிடம் சரணடைந்துள்ளனர். நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜி சொந்தமாக வேட்பாளரை நிறுத்திய நிலையில் இன்று அவர் வாபஸ் வாங்கினார். இதையடுத்து மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் காங்கிரஸ்க்கு ஆதரவளிப்பதாகவும், ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சமீபத்திய சட்டபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோல்வியடைந்தன. மம்தா பானர்ஜி ஆட்சியை பறிகொடுத்தார். இதையடுத்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு தரப்பினும், அரூப் ராய் தலைமையில் இன்னொரு தரப்பினரும் (ரிதப்ரதா பானர்ஜி) தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது.
இதில் 2 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி மற்றும் அரூப் ராய் தரப்பினர் வேட்பாளர்களை அறிவித்தனர். இருஅணிகளும் உரிமை கோரியதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் புல்லுடன் கூடிய இரட்டை மலர் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இருதரப்புக்கும் வேறு பெயர், சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி அணி ‘மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் கால்பந்து வீரர் சின்னத்திலும், அரூப் ராய் என்பவர் தலைமையிலான அணி வேட்பாளர் ‘டெமாக்கிரட்டிக் திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் ‘கடிதம்’ (Envelope) சின்னத்திலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜி அணி சார்பில் போட்டியிடும் சன்சிதா பிரதான் தே இன்று திடீரென்று தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். சன்சிதா ஆசிரியராக உள்ளார். இவரது கணவர் சத்யஜித் மம்தா பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளர். இதனால் சன்சிதாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் நந்திகிராம் சட்டசபை தொகுதியின் வேட்பாளர் போட்டியில் இருந்து முழுவதுமாக விலகும் வகையில் சன்சிதா தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கி உள்ளார்.
வேட்பாளர் சன்சிதாவின் இந்த முடிவுக்கு பின்னால் மம்தா பார்ஜி உள்ளதாக கூறப்படுகிறது. அவரது அறிவுரைப்படி தான் சன்சிதா தேர்தல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ”நந்திகிராம் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலில் நாங்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கஉள்ளோம். ‘இந்தியா’ கூட்டணியை பலமாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதன்மூலம் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியிடம் சரணடைந்துள்ளார். ஏனென்றால் மம்தா பானர்ஜியின் திரிணாமல் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்து தான் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது கட்சி இரண்டாக பிளவுப்பட்ட நிலையில் வேறு வழியின்றி மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதாக கூறி தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

