காட்டு யானைக்குக் கண்ணீர் அஞ்சலி: வயநாட்டை நெகிழ வைத்த 'லட்சுமி'யின் மரணம்

Spread the love

கேரளாவின் வனப்பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், வயநாடு காட்டு எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மனிதநேயத்திற்கும், விலங்கினப் பாசத்திற்கும் ஒரு உன்னதமான சான்றாக மாறி நெகிழ வைத்துள்ளது.

மூன்று பக்கமும் அடர்ந்த காடுகளாலும், ஒரு பக்கம் கபினி நதியாலும் சூழப்பட்ட செகடி, பழங்குடியின மக்கள் வாழும் ஒரு விவசாயக் கிராமம் புல்பள்ளி அருகே உள்ள செகடி. பாரம்பர்ய நெல் ரகங்களை விளைவிப்பதில் இப்பகுதி பிரசித்தி பெற்றது.

பொதுவாக, வனப்பகுதிகள் அருகில் இருக்கும் விவசாய நிலம் என்றால் காட்டு விலங்குகள், குறிப்பாக யானைகள் சேதப்படுத்தும். மனிதர்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.

செகடி காட்டு யானை லட்சுமி
செகடி காட்டு யானை லட்சுமி

ஆனால், அந்தப் பகுதியில் வசித்த ஒரு காட்டு யானையை செகடி கிராம மக்கள், தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதி வளர்த்திருக்கின்றனர். லட்சுமி எனக் கிராம மக்களால் அழைக்கப்படும் அந்தப் பெண் யானை, கடந்த ஒரு மாதமாக கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிப்போனது.

காட்டு எல்லையோரம் மெதுவாக உலா வரும் லட்சுமி, பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் வரை வருவாள். ஆனால், ஒருபோதும் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களையோ, உழைப்பையோ சேதப்படுத்தியதே இல்லை என்று கிராம மக்கள் நெகிழ்ச்சியோடு கூறுகிறார்கள்.

சந்திரோத் பழங்குடியின குடியிருப்புக்கு அருகில் உள்ள பலா மரங்கள் நிறைந்த பகுதியே லட்சுமியின் விருப்பமான இடமாக இருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பலாப்பழங்கள் அங்கு தாராளமாகக் கிடைத்ததால், அங்கேயே அதிக நேரத்தைச் செலவிட்டாள்.

தினமும் காலையில் காட்டை விட்டு வெளியேறும் லட்சுமி, மாலை வரை கிராம எல்லையிலேயே நின்றுவிட்டு, அந்தி சாயும் வேளையில் அமைதியாகக் காட்டுக்குள் சென்றுவிடுவாள்.

காட்டின் உள்ளே இருக்கும்போது கூட, கிராம மக்களின் குரல் கேட்டால், தனக்குத் தெரிந்தவர்கள் கூப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு உடனே எல்லையோரத்திற்கு ஓடி வருவாள்.

செகடி காட்டு யானை லட்சுமி
செகடி காட்டு யானை லட்சுமி

நாளடைவில், லட்சுமி அந்தப் பகுதியின் செல்லப் பிள்ளையாகவும், ஒரு பிரபலமாகவும் மாறினாள். அவளது சாந்தமான குணத்தைக் கேள்விப்பட்டு புகைப்படக் கலைஞர்களும், Vloggers செகடி கிராமத்திற்குப் படையெடுத்தனர்.

மற்ற காட்டு யானைகளைப் போலன்றி, தன்னை மனிதர்கள் அருகில் இருந்து பார்ப்பதையோ, புகைப்படம் எடுப்பதையோ லட்சுமி கோபமில்லாமல் அனுமதித்தாள். கிராமத்துப் பெண்களும் குழந்தைகளும் தங்களின் பயத்தைப் போக்கிக் கொண்டு, யானை அகழிக்குக் அப்பால் நின்று பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை அவளுக்குக் கொடுத்தனர்.

‘லட்சுமி’ என்று அன்போடு அழைத்தால், எல்லோரையும் அடையாளம் தெரிந்து கொண்டு, மெதுவாக அகழியை நோக்கி நடந்து வந்து உணவை வாங்கி உண்பாள்.

வியாழக்கிழமை காலை பாதிரி காட்டுப் பகுதியில் லட்சுமி உயிரற்றுக் கிடந்தாள். அதற்கு முந்தைய நாள் அவளைப் பார்த்தபோதே மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருந்ததாகக் கிராம மக்கள் கண்ணீருடன் கூறினர். வயநாடு வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், லட்சுமி முதுமை மற்றும் அது சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் இயற்கை மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.

அவளுக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும் என்றும், முதுமை காரணமாகவே அவளால் நீண்ட தூரம் உணவு தேடிப் பயணிக்க முடியாமல், தண்ணீர் மற்றும் பழங்கள் தாராளமாகக் கிடைக்கும் செகடி கிராம எல்லையிலேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செகடி காட்டு யானை லட்சுமி
செகடி காட்டு யானை லட்சுமி

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, வனத்துறை விதிமுறைகளின்படி லட்சுமியின் உடல் காட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது. காலையிலிருந்தே தங்களின் அன்பிற்குரிய யானைத் தோழியைப் பார்க்கப் பழங்குடியின மக்களும், கிராமத்தினரும் எல்லையோரக் காட்டில் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர்.

லட்சுமியின் இந்த மறைவு, புல்பள்ளி-சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் பயணிகளின் செல்லப் பிள்ளையாக வாழ்ந்து, கடந்த 2019-ல் மற்றொரு காட்டு யானையுடனான சண்டையில் உயிரிழந்த ‘மணியன்’ என்ற சாதுவான யானையின் நினைவுகளை மீண்டும் அப்பகுதி மக்களிடையே கிளப்பியுள்ளது.

மனிதர்களும் விலங்குகளும் அன்பால் மட்டுமே பிணைக்கப்பட முடியும் என்பதற்கு லட்சுமியின் வாழ்வும், அவளுக்காகச் சிந்தப்பட்ட செகடி கிராமத்து மக்களின் கண்ணீருமே சாட்சி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *