காதலனை கைபிடிக்க, சொந்த தந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையின் வேலையில் சேர்ந்த மகள் 3 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயந்த் பல்லவார். கான்ஸ்டபிளான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி அங்குள்ள கோர்ட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அது ஒரு இயற்கையான மரணம் என்று கருதி பிரேத பரிசோதனை செய்யாமல் ஜெயந்த் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

காட்டிக்கொடுத்த மாஜி கணவன்
ஜெயந்த் மரணத்திற்கு பிறகு அவரது மகள் ஆர்யா தனது காதலன் ஆசிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி சிறிது நாட்களில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டனர். மற்றொருபுறம் ஜெயந்த் இறந்ததால் அவரது மகள் ஆர்யாவிற்கு போலீஸ் வேலை கிடைத்தது. தற்போது அவர் பயிற்சியில் இருக்கிறார்.
கணவன் மனைவி சண்டையால் ஆர்யா தனது கணவனை விட்டுவிட்டு தனது பெற்றோர் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த ஆசிஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்த்தை அவரது மகள் விஷம் கொடுத்து கொலை செய்ததாக போலீஸில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து இவ்வழக்கை போலீஸார் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில் அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.
பாலில் விஷம் கலந்து கொடுத்த மகள்
இது குறித்து போலீஸார் கூறுகையில், ”ஆர்யாவின் காதலுக்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து ஜெயந்த்தை கொலை செய்ய ஆர்யாவும், அவரது காதலனும் சேர்ந்து முடிவு செய்தனர். இதற்காக ஆர்யா தனது உறவினர் சைதன்யா என்பவரை தொடர்பு கொண்டு ரூ.5 ஆயிரம் கொடுத்து விஷம் வாங்கி வரச்சொன்னார். அந்த நபரும் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். 2023ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ஜெயந்த் வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். அந்த நேரம் ஆர்யா தனது தந்தைக்கு ஆசையாக மில்க்ஷேக் கொண்டு வந்து கொடுத்து குடிக்கும்படி சொன்னார்.
வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஜெயந்த் தனது மகள் கொடுத்த பாலை வாங்கி குடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் பாலில் ஆர்யா விஷம் கலந்து இருந்தார். ஜெயந்த் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றபோதுதான் லேசான மயக்கம் வருவது போன்று உணர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து இறந்துவிட்டார். இக்கொலை தொடர்பாக ஆர்யா, ஆசிஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிஷ் போலீஸ் பயிற்சியில் இருந்தபோது நடத்தை சரியில்லாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.