காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயார் வெட்டிக் கொலை: அப்பா, அண்ணன் படுகாயம்; இளைஞர் வெறிச்செயல்!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு இரண்டு மகள்களும், பிளஸெட் ராஜா என்ற மகனும் உள்ளனர். முத்துக்கிருஷ்ணனின் மூத்த மகள் அருகிலுள்ள ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டரான ஞானப்பிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதல் விவகாரம் அச்சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அச்சிறுமி ஞானப்பிரகாஷிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஞானப்பிரகாஷ், நேற்று நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு லேசான மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குப் பின்வாசல் வழியாகச் சென்றுள்ளார்.

Police

அப்போது வீட்டிற்குள் வந்த நபரைப் பார்த்து நீ யார்? என்று அச்சிறுமி சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த முத்துக்கிருஷ்ணனை, ஞானப்பிரகாஷ், தான் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முத்துக்கிருஷ்ணனுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு தடுக்கச் சென்ற முத்துக்கிருஷ்ணனின் மனைவி மேரி விஜிலாவுக்கும் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சத்தம் போட்ட முத்துக்கிருஷ்ணனின் மகன் பிளஸெட் ராஜாவுக்கும் கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த இரண்டு மகள்களையும் ஞானப்பிரகாஷ் மிரட்டி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது, தன்னுடன் வராவிட்டால் அவர்களையும் வெட்டிவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர், தனது சொந்த ஊரான ஆனந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையே, இன்று காலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முத்துக்கிருஷ்ணனின் மூத்த மகளை செல்போனில் தொடர்புகொண்டு போலீஸார் விசாரித்தபோது, ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் தங்களை அழைத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் உடனடியாக ஆனந்தபுரத்திற்குச் சென்று,

Police

அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புரோட்டா மாஸ்டர் ஞானப்பிரகாஷை ஆனந்தபுரம் காட்டு பகுதியில் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் முதலூர் மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *