2011 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில், அப்போதைய முதலமைச்சர் 110 விதியின் கீழ் செய்த அறிவிப்புகளின் எண்ணிக்கை 181 என்று விபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் தோராய மதிப்பு ரூபாய் 1,72,196 கோடி என்றும் அவை கூறுகின்றன. அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அடுத்த முதல்வர் 453 அறிவிப்புகளை விதி எண் 110-ன் மூலமே அறிவித்தார். சுமார் 3.27 லட்சம் கோடி அளவிலான 1704 பணிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரூபாய் 87 கோடி மதிப்பிலான 1167 பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. மற்ற முதல்வர்களும் 110-ஐப் பயன்படுத்தியிருந்தாலும், இவர்கள் அளவுக்கு பயன்படுத்தவில்லை.
தற்போதைய அரசு பல எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், மக்கள் வெளிப்படையான விவாதங்களை விரும்புகிறார்கள். இதனால் விதி எண் 110-க்கு சற்றே ஓய்வளிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். தற்போதைய முதல்வர் சுமார் 18 அறிவிப்புகளை விதி எண் 110-ன் கீழ் செய்துள்ளதாகவும், அது 30-க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்த செய்திகள் என்றும் கூறப்படுகிறது. இனிமேலாவது நடைபெறும் சட்டமன்றக் கூட்டங்களில், திட்டங்கள் குறித்த நல்ல விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படுமானால், நல்ல அரசுக்கான சான்றிதழை மக்கள் அளிப்பார்கள்.
இப்பொழுதோ தகவல் தொழில்நுட்பத்துறை மகத்தான வளர்ச்சியை எட்டியுள்ளது. கர்மவீரர் காமராஜர் காலத்தில் இவ்வளவு வசதிகள் இருந்ததில்லை. இருப்பினும் அவர் குறையின்றி அனைத்தையும் செய்தார். ஓரிரவில் வைரவன் பல கோப்புகளைத் தலைவரின் கையெழுத்துக்காக வைத்திருந்தார். காலையில் பார்த்தால், உயர் அதிகாரிகளின் உயர் பதவி மற்றும் இடமாற்றம் தொடர்பான சில கோப்புகள் மட்டும் கையெழுத்தாகி இருந்தன.
ஓய்வாக இருந்த நேரத்தில், அவற்றை மட்டும் ஏன் அவசரமாக முடித்தீர்கள் என்று வைரவன் கேட்டபோது, தலைவர் கூறிய பதில் சிந்திக்கத்தக்கது. இந்தக் கோப்புகள், கையெழுத்தான தேதியிலிருந்து தனி மனிதர்களுக்குப் பயன் தரக்கூடியவை. எந்த ஒரு தனி மனிதரும் நமது நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது.
திட்டக் கோப்பில் உடனே கையெழுத்துப் போட்டாலும், பலன் பயனாளியைச் சென்றடையச் சில நாட்களாவது ஆகிவிடும், நம் அமைப்பு அப்படிப்பட்டது, ஆகவேதான் அவற்றை உடனடியாக முடித்தேன் என்றார். அவரின் இந்த நிர்வாக மாண்பு என்றும் போற்றத்தக்கது.
-ரெ.ஆத்மநாதன், புளோரிடா