“கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்” – வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பிரபலம் தற்கொலை? | Killed for Refusing to Provide a Car: Social Media Influencer Commits Suicide in Lucknow Due to Dowry Harassment

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சமீபத்தில் போபாலில் உள்ள தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்து தூக்கில் தொடங்கவிட்டுவிட்டதாக சர்மாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் சர்மாவின் உடல் இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதோடு இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது லக்னோவில் மேலும் ஒரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கான்பூரைச் சேர்ந்த சோசியல் மீடியா பிரபலமான மான்சி என்பவர் கடந்த 2024ம் ஆண்டு லக்னோவைச் சேர்ந்த ரஜபுத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரஜபுத்தும் சோசியல் மீடியா பிரபலம் ஆவார்.

மான்சி - ரஜபுத்

மான்சி – ரஜபுத்

ரஜபுத்திற்கு இன்ஸ்டாகிராமில் 8 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். லக்னோவில் உள்ள தனது கணவன் வீட்டில் மான்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கார் கேட்டு கொன்றுவிட்டனர்

மான்சியை கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டதாக மான்சியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், “‘திருமணத்தின் போது ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுத்தோம். ஆனால் அவை ரஜபுத் குடும்பத்திற்குத் திருப்தியளிக்கவில்லை.

திருமணமான நாளில் இருந்து அவர்கள் அதிக வரதட்சணை கோரி வந்தனர். குறிப்பாக ஒரு கார் கேட்டனர். திருமணமான நாளில் இருந்து போதுமான வரதட்சணை கொண்டு வராததற்காக அவமானப்படுத்தி சித்ரவதை செய்து வந்தனர்.

அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மான்சியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தனர். சித்திரவதை பற்றி மான்சி எங்களிடம் தெரிவித்தார். எனவே சமாதானம் செய்வதற்காக நாங்கள் பல முறை லக்னோ சென்று வந்தோம். ஆனால் இப்போது எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டாதாகக் கூறுகின்றனர்.

அவர்கள் கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது போன்று ஜோடித்துள்ளனர்” என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வரதட்சணை உட்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ரஜபுத் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நேரில் அழைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *