காலையில் தூய்மைப் பணியாளர், மாலையில் ஆட்டோ ஓட்டுநர்: பிள்ளைகளுக்காகப் போராடும் இந்திராணி!

Spread the love

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால் அருகே உள்ள ஒரு தெருவில் வசித்து வருகிறார், இந்திராணி. வாழ்வாதாரத்துக்கான தீர்க்கமான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே, வாழ்க்கையை எதிர்கொள்ளும் அவரது மன உறுதி நம்மை வியக்க வைக்கிறது.

“அம்மா வீடு பக்கத்துலதான் இருக்கு. ஆனா, நானும் என் பசங்களும் தனியாத்தான் இருக்கோம். யாராயிருந்தாலும் நம்மள நாமதான் பாத்துக்கணும்” என்று இயல்பாகச் சொல்கிறார்.

அவரது அந்த ஒரு வார்த்தையிலேயே, பல வருடப் போராட்டங்களின் சுவடுகள் தெரிகின்றன.

கணவரைப் பிரிந்து வாழும் இந்திராணி, பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகளையும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகனையும் தனியாக வளர்த்து வருகிறார்.

இந்திராணி

“என் பசங்க நல்லா படிக்கணும். அவங்களுக்கு நான் சந்திச்ச கஷ்டம் வரக் கூடாது. அதுதான் என் ஆசை” என்று கூறும்போது அவரது குரலில் தாய்மையின் உறுதி ஒலிக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஒரு பள்ளியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். காலை முதல் மதியம் வரை பள்ளியில் வேலை. ஆனால், அந்தச் சம்பளம் மட்டும் குடும்பத்தை நடத்தப் போதவில்லை.

“வாடகை வீடு, பசங்களோட படிப்புச் செலவு, வீட்டுச் செலவு… எல்லாத்தையும் சமாளிக்கணும். அதனால பார்ட் டைம் வேலையும் தேடினேன்,” என்கிறார்.

ஏமாற்றமும் புதிய துணிச்சலும்

கூடுதல் வருமானத்திற்காகப் பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். ஆனால், அங்கு கிடைத்தது கசப்பான அனுபவங்கள் மட்டும்தான்.

“இரண்டு, மூணு மாசம் வேலை செஞ்சிருக்கேன். சம்பளம் தர்றோம்னு சொல்லிட்டு கடைசில கொடுக்கவே மாட்டாங்க. நிறைய தடவை ஏமாந்திருக்கேன்,” என்று அவர் கூறுகிறார்.

அப்போதுதான் அவருக்குள் ஒரு தீர்க்கமான முடிவு உருவாகியிருக்கிறது: “அடுத்தவங்களை நம்பி இருந்தா நமக்கு முன்னேற்றம் இருக்காது. நாமளே ஏதாவது செய்யணும்னு தோணிச்சு.” அந்த எண்ணமே அவரை ஆட்டோ ஓட்டுநராக மாற்றியது.

ஆட்டோ ஓட்டுநராகப் புதியப் பயணம்

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்டோ ஓட்டுநர் உரிமம் (Driving License) வாங்கியிருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் முழுநேரமாக அந்தத் தொழிலில் இறங்கியுள்ளார்.

“ஆட்டோ ஓட்டுறது பெண்களுக்குக் கஷ்டமா இல்லையா?” என்று கேட்டபோது, சிரித்தபடியே பதிலளித்தார்.

“எந்த வேலையிலயும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். நான் செய்யாத வேலையே இல்லை. கஷ்டத்தைப் பாத்து பயந்தா வாழ்க்கை ஓடாது. அதனால துணிஞ்சு இறங்கிட்டேன்.”

இந்திராணி

மதியம் பள்ளி வேலையை முடித்துவிட்டு, ஆட்டோவை எடுத்துக்கொண்டு சாலைக்கு வருகிறார். இரவு 10 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறார். “மதிய நேரத்துல ஆர்டர் அதிகமா வராது. மாலை நாலு மணிக்கு மேலதான் கொஞ்சம் வேலை இருக்கும்,” என்கிறார்.

ஆட்டோவையும் தவணை முறையில்தான் வாங்கியிருக்கிறார், இந்திராணி. “மாதம் 7,500 ரூபாய் கட்டணும். சில நேரம் வருமானம் குறையும்போது பயமா இருக்கும். ஆனா, கட்டியே ஆகணுமே,” என்று சொல்லும்போது முகத்தில் லேசான சோர்வு தெரிகிறது. ஆனால், அந்தச் சோர்வை விட அவரது கண்களில் இருக்கும் நம்பிக்கை பெரிதாக இருக்கிறது.

“நான் இப்படி தனியா கஷ்டப்படுறது எல்லாமே என் பசங்களுக்காகத்தான். அவங்க நல்ல நிலைக்கு வரணும். அதுக்காக இன்னும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளிப்பேன்,” என்கிறார் மனஉறுதியுடன். அந்த வார்த்தைகளில் ஒரு தாயின் தியாகமும், உழைப்பும், நம்பிக்கையும் ஒளிந்திருந்தன.

பள்ளியில் தூய்மைப் பணியாளராகவும், சாலையில் ஆட்டோ ஓட்டுநராகவும் உழைக்கும் இந்திராணியின் கதை, சுயசார்புடன் வாழத் துடிக்கும் பல பெண்களுக்கு ஒரு நம்பிக்கையின் ஒளிவிளக்கு!

– அ.விமலா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *