காவிரி நீர் கட்டண விவாதம்; இந்திய சிமென்ட்டுக்கு முன்னுரிமை | அணை ஓசை 30 | history anai osai mettur dam construction series 30

Spread the love

மேட்டூர் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் புதிய நிலப் பகுதிகளுக்கான பாசனத்திற்காக விடப்படும் காவிரி நீர் கட்டண ஒழுங்கு (3,01,000 ஏக்கர்களுக்கு) வருடம் ஒன்றுக்கு கீழ்க்கண்டவாறு சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

1. அரசு உலர் நிலம் – 99,474 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 15/-

2. ஜமீன்தாரி & இனாம் உலர் நிலம் – 1,19,999 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 15/-

3. ஜமீன்தாரி & இனாம் ஈரநிலம் – 64,349 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 7-8-0 (ரூ. 7, அனா 8)

4. அரசு ஆக்கிரமிப்பு ஈரநிலம் – 16,400 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 2/-

5. அரசு ஈர நிலம் (ஆக்கிரமிப்பு இல்லாத) – 1,768 ஏக்கர் – ஏக்கருக்கு ரூ. 6/-.

இவை அதிகம் என்றும் நீர் வரி இந்த அளவு கட்ட இயலாது என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பலத்த விவாதங்கள் சட்டமன்றத்தில் நடந்தேறியது. அது குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

எத்திராஜுலு நாயுடு: “எந்த அதிகாரத்தின் கீழ் அரசு ரூ. 15/- வசூலிக்கிறது?”

C.P.R (அரசுத் தரப்பு): “அந்தக் கட்டணம் செலுத்தினால் தான் தண்ணீர் கொடுக்கப்படும்.”

C.V.V.: “மக்கள் தண்ணீர் வாங்க மறுத்தால்?”

C.P.R: “அவர்களின் தேவை அவர்களைத் தள்ளும். மறுத்தால் அரசு கட்டாயப்படுத்தாது. அவர்கள் பணம் செலுத்தினால் தண்ணீர் கிடைக்கும்.”

காட்டமான கேள்விகள். நறுக்கு தெறித்தாற் போல பதில்கள் கூறப்பட்டன. மேலும் பல கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டன.

“ஜமீன்தாரி நிலங்கள் இந்த கட்டணத்தை ஏற்குமா?”

“வருவாய் வாரியம் விசாரணை செய்து, மக்கள் ஒருமித்தமாக சம்மதித்துள்ளனர் என அறிக்கை பெறப்பட்டுள்ளது.”

“ரூ. 15/- கட்டணத்தால் எவ்வளவு வருவாய் வரும்?”

“சுமார் ரூ. 5 லட்சம், ஆனால் இது தற்போதைய வருமானம் அல்ல. நீர் வந்தவுடன் விகிதங்கள் உயர்வதைச் சுட்டிக்காட்டும் எச்சரிக்கை.”

“குத்தகைதாரர்கள் இதை ஏற்பார்களா?”

“வருவாய் வாரியம் “சிரமமில்லை” என்று தெரிவித்துள்ளது”.

“தற்போதைய கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 15/- அதிகமா?”

“ஆம், தற்போது ரூ. 5/- அல்லது ரூ. 7-8-0 தான் வசூலிக்கப்படுகிறது.”

“நீர்ப்பாசன சட்டம் கொண்டு வரப்படுமா?”

“ஆம், திட்டமிடப்பட்டுள்ளது. அது மாகாணமெங்கும் அமல்படுத்தப்பட்டாலும், அல்லது சாத்தியம் இல்லையெனில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும் சட்டம் கொண்டுவரப்படும்” என்ற பதிலோடு விவாதம் முடிவு பெற்றது.

இந்த விவாதத்தின் மூலம், அரசு வருவாய் ஈட்டும் நோக்கில் திட்டமிட்ட விகிதங்களை உறுதியுடன் நிர்ணயித்தது என்பது தெளிவாகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *