”காவிரி பிரச்னையை உன்னிடம் முறையிடுகிறேன்” – பெரியகோயில் பெருவுடையார் சன்னதியில் வைகோ தரிசனம்

Spread the love

தஞ்சாவூரில் மதிமுக சார்பில், கர்நாடகா அரசு மேகதாதுவில், அணை கட்டுவதையும், அதற்கு உறுதுணையாகச் செயல்படும் மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்த வைகோ பெரியகோவிலுக்குச் சென்று பெருவுடையார் சன்னதியில் தரிசனம் செய்தார்.

மேலும் பெருவுடையார் முன்பு திருமுறைகளைப் பாடினார். பின்னர், ”காவிரி பிரச்னையை உன்னிடம் முறையிடுகிறேன், காவிரி ஆற்றுக்குப் பேராபத்து வந்திருக்கிறது. கர்நாடக அரசு சர்வதேச சட்டங்களை மீறி காவிரியின் குறுக்கே நான்கு அணைகளைக் கட்டி விட்டது. தற்போது ஐந்தாவதாகப் புதிய அணை கட்ட முயற்சி செய்கிறது.

பெரியகோயிலில் தரிசனம் செய்த வைகோ
பெரியகோயிலில் தரிசனம் செய்த வைகோ

டெல்டா தனி பிரதேசமாக விளங்க, உன் மீது ஆணையாக உன்னிடம் விண்ணப்பிக்கிறேன்” என பெருவுடையாரிடம் முறையிட்டார்.

அப்போது, சிவச்சாரியார் ஒருவர் தீபாரதனை காட்டி, சமஸ்கிருதத்தில் மந்திரம் கூற அவரிடம், ”தேவாரம், திருவாசகம் தெரியாதா?” எனக் கேட்ட வைகோ தேவாரப் பாடல்களையும் பாடினார். இதையடுத்து ராஜராஜ சோழன், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசியதாவது, ”மேகதாது அணையைக் கட்டுங்கள். நாங்க தலையிட மாட்டோம் என மோடி நயவஞ்சகத்தை ஏன் செய்கிறார் தெரியுமா, கர்நாடக முதல்வர் சிவகுமார் காங்கிரஸ் கட்சிக்காரர், அவருக்கு ஏன் பிரதமர் மோடி ஆதரவு தெரிவிக்ககிறார் என்றால், கர்நாடகாவில், பாஜக காலுான்ற செய்வதற்காகத்தான், பிரதமர் மோடி இந்தத் துரோகத்தைத் திட்டமிட்டு செய்கிறார். காவிரி தண்ணீரை, மேட்டூர் அணையில், இருந்து தமிழகத்தில் மடைமாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேகதாட்டுவில் அணை கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஆனால், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் காவிரியின் குறுக்கே மேல்நிலை மாநிலம் அணையைக் கட்ட கூடாது என உத்தரவிட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை மோசடியாக கர்நாடக முதல்வர் சிவக்குமார் அணை கட்ட தீர்ப்பு கொடுத்து விட்டதாகக் கூறி வருகிறார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஆரம்பிப்பது மட்டுமல்ல, தமிழகத்திற்குள் நமக்கு இருக்கக்கூடிய நீராதாரங்களையும் தடுக்க திட்டமிட்டு விட்டார்கள். முதற்கட்டமாக, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புப் பணிகளுக்கு 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பணிகளை நிறுத்தக்கோரியும், மேற்கொள்ளப்பட்ட பணிகளை அகற்றக்கோரியும், கர்நாடக அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்திற்கு தலைக்கு மேல் இடி விழபோகிறது. எங்களின் அடுத்த போராட்டம், இந்திய விமானப்படை தளத்திற்கு முன்பாக நடைபெறும். மேகதாது அணை கர்நாடகவுக்குச் சொந்தம் என்றால், எங்கள் ஊர் திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடியில் உள்ள பீரங்கி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தெற்கே உள்ள கடற்படை தளம் எங்களுக்குச் சொந்தம்.

நான் உயிருடன் இருந்தால், 2047 நாடு சுதந்திர நாடாக இருக்காது. சோழர்கள் கிழக்கு நாடுகளை வென்றனர். ஆனால், இப்போது தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் சோம்பேறியாக ஆகிவிட்டார்கள்.

வைகோ

பேரன் எலும்பும், தோலுமாக சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் போதுதான் தெரியும். சோழ மண்டலம் ஆசியாவின் நெற்களஞ்சியம் என்பது எல்லாம் இப்போது போய் விட்டது. இப்போது, நம் எதிர்காலம் சூனியமாகிவிட்டது. இந்த மண்ணின் மக்களுக்காக நான் வாழ்கிறேன். ​

பகுத்தறிவுவாதி நான் பெரியகோயிலுக்குப் போய், மூலஸ்தானத்தில், இடுப்பில் பட்டுத் துண்டைக் கட்டிக்கிட்டு கும்பிட்டேன். இவர் என்னடா பகுத்தறிவுவாதி? என எல்லாம் பேசுவார்கள். ​தேவாரமும் திருவாசகமும் நமது சொத்துக்கள். பெரியாரைப் பற்றியும் பேசுவேன், பெரியார் சிலை உடைக்கவந்தால் கையை வெட்டுனே். பெருவுடையாரான முக்கண் முதல்வனைப் பற்றியும் பேசுவேன். இவன்தான்” வைகோ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *