கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில், கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அதிமுக கவுன்சிலரை கடத்தியதாக அக்கட்சியின் எம்எல்ஏ அசோக்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் இருந்து வருகிறார். துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சாவித்தரி கடலரசுமூர்த்தி உள்ளார். நகராட்சியை பொறுத்தவரை திமுக கவுன்சிலர்கள் 25 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் தலா ஒருவரும் என மொத்தம் 33 பேர் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 16-ம் தேதி, திமுக கவுன்சிலர்கள் 23 பேர் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், தலைவரின் செயல்பாடுகள் நகராட்சிக்கும், அரசுக்கும் எதிராக உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடங்கிய மனுவை, நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாரிடம் அளித்தனர்.
தொடர்ந்து, நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு இன்று 10-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனிடையே அதிருப்தியில் உள்ள திமுக கவுன்சிலர்களை சமாதானம் செய்யும் முயற்சியில், அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் ஈடுபட்டும் பயனில்லை.

மேலும், திமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து கவுன்சிலர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்பதால், கடந்த 6-ம் தேதி இரவு திமுக கவுன்சிலர்கள் 20 பேர், மேட்டுபாளையம், ஊட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை 10 மணி அளவில் நகராட்சி அலுவலகத்திற்கு பேருந்து மூலம் திமுக கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர், அதிமுக ஆதரவு கவுன்சிலர் உள்ளிட்டோர் அழைத்துவரப்பட்டனர்.
அப்போது, அதிமுக கவுன்சிலர் நாகஜோதியை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாகக் கூறி, பேருந்தை அதிமுக நகரச் செயலாளர் கேசவன் தலைமையிலான கட்சியினர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் வந்த பேருந்தை போலீஸார் பாதுகாப்பாக நகராட்சி வளாகத்திற்குள் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, நகராட்சி நுழைவுவாயில் கதவுகள் அடைக்கப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிமுக மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ, கடத்திச் செல்லப்பட்ட அதிமுக கவுன்சிலர் நாகஜோதியை வெளியே அனுப்ப வேண்டும், அவர் வந்து என் விருப்பப்படி தான் நான் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன் எனத் தெரிவித்தால் நாங்கள் கலைந்து செல்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதற்கு போலீஸார், நாகஜோதி அவரது விருப்பப்படி தான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார். முன்னதாக அதிமுக கவுன்சிலரின் கருத்தைக் ஆணையாளர் கேட்டு தான் உள்ளே அனுப்பி வைத்தார் என்றனர்.
இதற்கு எம்எல்ஏ, காவல்துறையினர் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, “காவல்துறையினர் தங்களது சீருடையை கழட்டி வைத்துவிட்டு திமுக வேட்டியை கட்டிக் கொள்ளுங்கள். பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், அதிமுக கவுன்சிலரை கடத்தியதற்கு பாதுகாப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்’ என கேட்டு காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார். 20 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின்பு அதிமுக எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி முன்பு 20 நிமிடங்கள் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, நகராட்சி கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரம் விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடக்கும் என ஆணையாளர் தெரிவித்தார். இந்த கூட்டத்திற்கு ஆணையாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். சேலம் மண்டல ஆணையர் அசோக் குமார் மேற்பார்வையிட்டார். கவுன்சிலர்கள் வாக்களிக்கவும், வாக்கு சீட்டை செலுத்தவும் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கியவுடன் அறைக் கதவுகள் அடைக்கப்பட்டன. அறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கவுன்சிலர் காயம்: பேருந்து கண்ணாடி உடைக்க பட்ட போது அதன் துகள்கள் பேருந்தில் இருந்த திமுக கவுன்சிலர் ஒருவர் கண்ணில் பட்டதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதேபோல், கூட்டத்தில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்ட திமுக கவுன்சிலர் ஆயிஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு., கூட்டத்தில் கலந்து கொண்டார்.