கிருஷ்ணர் பாதம்… ஸ்டிக்கர் ஒட்டாதீங்க! – Kumudam

Spread the love

வணங்குவதற்கும் கடைப்பிடிப்பதற்குமான சடங்குகளும் சாங்கியங்களும் ஆதிகாலந்தொட்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, கெளமாரம் எனப்படும் முருக வழிபாடு, சாக்தம் என்று சொல்லப்படுகிற சக்தி வழிபாடு என பல தெய்வங்கள், பலப்பல பண்டிகைகள்!

கடவுளின் அவதார நிகழ்வுகளைக் கொண்டாடுகிற வழக்கம் போலவே, அவதாரத் திருநாளையும் கொண்டாடுகிறோம். ஸ்ரீராமரின் பிறந்தநாளிலும் கிருஷ்ணரின் பிறந்தநாளிலும் அப்படித்தான் வீட்டையே அலங்கரித்து ஆராதனைகள் செய்கிறோம்.

ராமர், கிருஷ்ணர் என்று சொல்லும்போது அவர்களின் அவதாரத் திதியை இங்கே கவனிக்கவேண்டும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு காரியத்தில் இறங்கும்போது, ‘இன்னிக்கி அஷ்டமி நவமி. அதனால ரெண்டுநாள் கழிச்சு பாத்துக்கலாம், பேசிக்கலாம்’ என்கிறோம். ஆனால் உலகுக்கே வாழ்க்கைத் தத்துவத்தை அருளிய ஸ்ரீராமர் நவமியில் அவதரித்தார். பகவான் கிருஷ்ணர் அஷ்டமியில் அவதாரம் எடுத்தார் என்கிறது புராணம்.

ஆவணி மாதத்தில், கிருஷ்ணபட்ச காலத்தில், அதாவது தேய்பிறை காலத்தில், அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்த கிருஷ்ண பரமாத்மா, கீதையின் மூலமாக மனிதப்பிறப்பின் அர்த்தங்களை, போராட்டங்களை, வியூகங்களை, சபை நாகரீகத்தை என சகலத்தையும் அருளிச் சென்றார்.

ஆவணி மாதமான இந்த மாதத்தில் வருகிற 4ம் தேதி கோகுலாஷ்டமி. கிருஷ்ண ஜயந்தித் திருநாள். இந்தநாளில், வீடு குதூகலமாகிவிடும். அழகுமயமாகி அமர்க்களப்படுத்திவிடுவோம். ஒவ்வொரு தெய்வங்களையும் நாம் அணுகுவதிலும் வழிபடுவதிலும்தான் மாறுபாடு வேறுபாடுகள். பிள்ளையாரையும் கிருஷ்ணரையும் கடவுளர் எனும் நிலையைக் கடந்து, ஒரு குழந்தையைப் போல் கொஞ்சிக்கொஞ்சி வழிபடுகிறோம். நம் வீட்டில் குழந்தை பிறந்தால், எப்படிக் குதூகலிக்கிறோமோ அப்படித்தான் இந்த கிருஷ்ண ஜயந்தி நன்னாளையும் கொண்டாடுகிறோம். ‘வா கண்ணா வா’ என்று வரவேற்று, பூஜிக்கிறோம்.

வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றி வைக்கிறோம். இது எல்லா தருணங்களிலும் செய்வதுதான். கோலமிடுவதும் அப்படியான இயல்புதான். இவற்றையெல்லாம் கடந்து, கோகுலாஷ்டமி நாளில், நாம் செய்யும் முக்கியமான விஷயம்… கிருஷ்ணர் பாதம்!

அரிசிமாவு கொண்டு நீரில் கரைத்து, அதைக்கொண்டுதான் கோலமிடுவோம். கிருஷ்ணர் பாதம் வரைவோம். எனக்கு இரண்டு வயது இருக்கும்போது, அம்மா அரிசிமாவு கரைத்து, ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் ஊற்றி நிரப்பினாளாம். என் அப்பா அப்படியே என்னை ஒரு கட்டைப்பை மாதிரி தூக்கிக்கொண்டு, என் பாதங்களை அரிசிமாவில் படும்படிநனைத்து, வாசலில் இருந்து, பூஜையறை வரை நடத்திச் சென்று, பிறகு துண்டால் என் கால்களைத் துடைத்துவிட்டு, வாசலில் இருந்து பார்ப்பாராம். அந்தப் பாதங்கள், வெண்ணெயென வெள்ளைவெளேரென, பளீரென்றிருக்கும். இதை மாக்கோலம் என்போம்; நீர்க்கோலம் என்போம். முக்கியமாக கிருஷ்ணர் பாதம் என்று வணங்குவோம்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், கடந்த இருபது வருடங்களில் நிகழ்ந்திருக்கிற விஷயங்கள் ஆச்சரிய, அதிர்ச்சிகள்தான். கலர்கலராக கிருஷ்ணர் பாத ஸ்டிக்கர்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. அந்த ஸ்டிக்கர்களை வாங்கி, நிலை வாசலில் ஆரம்பித்து, பூஜையறை வரைக்கும் ‘பிரிச்சிக்கோ ஒட்டிக்கோ’ என்று ஒட்டிவிடுகிறார்கள். கோலத்தின் காலம் இப்படியாகிவிட்டது.
பொதுவாகவே பண்டிகைகளின் போது, நிலைவாசலில் மாவிலைத்தோரணம் கட்டுவோம். இன்றைக்கும் சென்னை மாதிரியான பெருநகரங்களில், மாவிலைக்கொத்துகளும் விற்கிறார்கள். ஆனால், பிளாஸ்டிக் மாவிலைகள், பிளாஸ்டிக் மாலைகள், ஸ்டிக்கர் பாதங்கள் என வேகவேகமாக மாறித்தான் போயிருக்கிறோம்.

பிஸ்கட் மாதிரி பொம்மை இருக்கும். அதை குழந்தைக்குக் கொடுத்தால் பிஸ்கட் இல்லை என்று தெரிந்ததும் ஏமாந்துபோகும்தானே! அதேபோல, வாசலில் வைக்கப்படுகிற மாவிலை வெறும் பிளாஸ்டிக், மாக்கோலத்துக்கு பதிலாகவும் பாதத்துக்குப் பதிலாகவும் ஸ்டிக்கர் என்றிருந்தால், வருகிற கண்ணன் எனும் கைக்குழந்தை ஏமாந்துவிடமாட்டானா? இத்தனைக்கும் மேலாக, ஏன் மாக்கோலம்?

அரிசி மாவால் செய்யப்பட்ட கிருஷ்ணர் பாதங்கள், கோலங்கள். இவை எறும்பு முதலான சின்னச்சின்ன உயிரினங்களுக்கு உணவாகவும் மாறுகிறது. பக்தி, வழிபாடு, அதற்குள் அடுத்த உயிருக்கு பசிக்கும் எனும் புரிதல் என்பவற்றைச் சொல்லிக்கொடுக்கின்றன, நம் பண்டிகைகள்!

’வாடா கண்ணா வா’ என்று அந்த அஷ்டமியின் நாயகனை ரோகிணியில் ஜொலித்த பேரழகனை. குழலூதும் கண்ணனை மாக்கோலமிட்டு வரவேற்போம். வணங்குவோம்.
குறிப்பாக, மாக்கோலத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, இல்லத்தை அழகாக்கி, உள்ளத்தில் தர்மசிந்தனையை மேலோங்கச் செய்வோம்!

‘கடமையைச் செய்’ என்கிறார் பகவான் கிருஷ்ணர்! நம் கடமைகளில் தான தருமங்களும் உண்டு. எனவே, கிருஷ்ணர் பாதத்தை மாக்கோலமிடுவதில் இருந்தே, கடமையாற்றத் தொடங்குவோம்!
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா!

– வி.ராம்ஜி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *