குஜராத்: அரவணைத்த இஸ்லாமியர்கள்; கோத்ராவில் வெற்றிபெற்ற சுயேச்சை இந்து பெண் வேட்பாளர்!

Spread the love

குஜராத் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க ஆதிக்கம் செலுத்தி வந்தது. மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. இது தவிர மொத்தமுள்ள 84 நகராட்சிகளில் 78 நகராட்சிகளில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் மொத்தமுள்ள 34 மாவட்ட பஞ்சாயத்துகளில் 33 மாவட்ட பஞ்சாயத்திலும், மொத்தமுள்ள 260 தாலுகா பஞ்சாயத்தில் 220 தாலுகா பஞ்சாயத்திலும் பா.ஜ.க வெற்றியை பதிவு செய்துள்ளது. நர்மதா மாவட்ட பஞ்சாயத்தை பா.ஜ.க-விடமிருந்து ஆம் ஆத்மி கட்சி பறித்துள்ளது.

அகமதாபாத் நகரில் கடந்த 46 ஆண்டுகளாக பா.ஜ.க வெற்றி பெற்று வந்த காடியா வார்டை காங்கிரஸ் பறித்துள்ளது. 15 மாநகராட்சிகளில் உள்ள 1,044 இடங்களில், பா.ஜ.க வியக்கத்தக்க வகையில் 937 இடங்களையும், காங்கிரஸ் 95 இடங்களையும் கைப்பற்றின. ஆம் ஆத்மி மற்றும் பிற கட்சிகள் தலா ஆறு இடங்களைப் பெற்றன.

2021-ஆம் ஆண்டில் சூரத் நகரில் ஒரு புதுமுகக் கட்சியாகக் களமிறங்கி, 120 இடங்களில் 27 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு வெறும் 4 இடங்கள் மட்டும் சூரத்தில் கிடைத்து இருக்கிறது.

முஸ்லிம் வார்டில் இந்து வேட்பாளர் வெற்றி!

உள்ளாட்சி தேர்தலில் வியக்கத்தக்க சில முடிவுகளும் கிடைத்து இருக்கிறது. கோத்ரா நகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக, வார்டு எண் 7-லிருந்து சுயேச்சை வேட்பாளரான இந்துப் பெண்மணி அபேக்சாபென் நைனேஷ்பாய் சோனி, ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த வார்டில் இருக்கும் வாக்காளர்கள் 100 சதவிகிதம் பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அபேக்சாபென் சோனியின் வெற்றி, கலவரத்தின் மூலம் நாடு முழுவதும் பேசுபொருளாக கோத்ராவின் அரசியல் போக்கை மாற்றியமைத்துள்ளது.

தான் வெற்றி பெற்ற 7-வது வார்டில் வாக்காளராக இல்லாத போதிலும், அவர் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்று இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக முஸ்லிம்கள் தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கே தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் இங்கு அதிலிருந்து வேறுபட்டு இந்து வேட்பாளர் அதுவும் சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *