2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியலையே தலைகீழாக மாற்றிவிட்டன. பல ஆண்டுகளாக தமிழ்நாட்ட்ய் அரசியலை இருமுனைப் போட்டியாக வைத்திருந்த திமுக – அதிமுக ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய சக்தியாக எழுந்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. ஆனால்… விஜய்க்கு கிடைத்திருப்பது தனிப்பெரும்பான்மை ஆட்சி அல்ல!
108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியை அமைத்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு விஜய் அரசுக்கு முக்கியமான பலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆட்சி அமைந்த சில காலத்திலேயே கூட்டணிக்குள் ‘குடைச்சல் பாலிடிக்ஸ்’ தொடங்கிவிட்டதாக தவெக வட்டாரங்கள் கொதிக்கின்றன.
தொடர்ந்து விமர்சிக்கும் கம்யூனிஸ்டுகள்!
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, மாணவர் போராட்டம், அரசின் செயல்பாடுகள் என ஒவ்வொரு விவகாரத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது. “கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது” என்பது இடதுசாரிகளின் நிலைப்பாடாக இருந்தாலும், “ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு எதிர்க்கட்சியைப் போல செயல்படுவது சரியா?” என்ற கேள்வி தவெக தரப்பில் எழுந்திருக்கிறதாம். அதிலும், தேசிய அரசியலில் பிரதமர் வேட்பாளர் தொடர்பான விவகாரம் புதிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘அமைச்சரவையை விட்டு வெளியேறுவோம்!’
பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளியான கருத்துக்கள் விஜய் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறவும் தயார் என்ற தொனியில் காங்கிரஸ் தரப்பில் பேச்சு எழுந்திருப்பது, தவெக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.
இதனால், “இன்று ஆதரவு… நாளை மிரட்டலா?” என்ற கேள்வி விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் வைக்கப்படுகிறதாம். அதே நேரத்தில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தரப்புகள், அரசுக்கு ஆதரவான அணுகுமுறையையே தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் செயல்பாடுகள் தொடர்ந்தால், எதிர்காலத்தில் கூட்டணி சமன்பாடே மாறலாம் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.
மாற்று ரூட்டை போடும் விஜய்?
இதனால்தான், தற்போதைய கூட்டணியை மட்டுமே நம்பாமல் மாற்று அரசியல் கணக்குகளையும் விஜய் தரப்பு போட்டு வருவதாக தகவல். பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், விஜயின் அரசியல் கண்களில் முக்கியமாக இருப்பது அதிமுகதான் என்கிறார்கள். ஆம்… ஆட்சியை இழந்த பிறகு அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி அதிருப்தி, தவெக தலைமைக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு ‘ஷிப்ட்’?
தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமையே காரணம் என அதிமுகவுக்குள் சிலர் குற்றம்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சியின் முக்கிய முகங்கள் சிலர் தவெக பக்கம் சென்றுள்ள நிலையில், இன்னும் சிலர் அரசியல் சூழ்நிலையை கவனித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதையடுத்து, அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தவெக பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருவதாக சொல்கிறார்கள். இதற்காக விஜய் தரப்பில் உள்ள இரண்டு முக்கிய அமைச்சர்கள், அதிமுகவின் சில மூத்த தலைவர்களுடன் பேசி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
‘கூட்டணி’யா… இல்லை ‘ஆதரவு’தானா?
தவெக தரப்பின் கணக்கு மிகவும் தெளிவாக இருக்கிறதாம். தற்போதைய கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தை குறைக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டாலும், போதிய சட்டமன்ற ஆதரவு கையில் இருக்க வேண்டும். இந்த இரண்டு அரசியல் இலக்குகளையும் அடைய அதிமுகவில் இருந்து கணிசமான ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் கணிசமான எம்.எல்.ஏ.க்கள் ஒரே அணியாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால், தமிழ்நாடு அரசியலில் இதுவரை இல்லாத புதிய கூட்டணி சமன்பாடு உருவாகும் என்கிறார்கள்.
‘அதிமுகவை காலி செய்யும்’ பிளான்?
ஒருபுறம் அதிமுகவின் முக்கிய தலைவர்களை தவெகவுக்கு இழுப்பது… மறுபுறம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவது… தேவைப்பட்டால் புதிய கூட்டணி அமைப்பை உருவாக்குவது… என பல்வேறு அரசியல் கணக்குகளை விஜய் தரப்பு போட்டு வருவதாக கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் ‘குடைச்சல்’ தொடர்ந்தால், “ஆட்சியை காப்பாற்ற கூட்டணிக் கட்சிகளை நம்புவதை விட… அதிமுகவையே பலவீனப்படுத்தி புதிய ஆதரவு வலையமைப்பை உருவாக்கலாமே!” என்ற அரசியல் கணக்கில் தவெக தலைமை நகர்ந்து வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அப்படியானால்… காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கு விஜய் தரப்பின் பதில் அரசியல் நகர்வாக அதிமுகவை நோக்கிய ஆபரேஷன் தொடங்கிவிட்டதா? அதிமுகவில் இருந்து மேலும் முக்கிய முகங்கள் தவெக பக்கம் வரப்போகிறார்களா? அல்லது தற்போதைய கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் சலசலப்பை சரிசெய்து விஜய் மீண்டும் அதே கூட்டணியுடனேயே பயணிப்பாரா? இப்படி தமிழ்நாடு அரசியலின் அடுத்த அதிரடி மூவ் விஜயின் கையில்தான் இருக்கிறது.

