கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன் (58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் ஏஞ்சல்(26) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஏஞ்சலை, அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டனிராஜ் (30) என்பவர் ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அவரைப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால், கடந்த மே மாதம் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த பின்னரும் ஆண்டனிராஜ் தொடர்ந்து ஏஞ்சலைக் காதலிக்குமாறு பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆண்டனி ராஜுக்கும், ஏஞ்சலின் குடும்பத்தினருக்கும் தினமும் பிரச்னை நடந்து வந்துள்ளது. இந்தப் பிரச்னைகளால் மனம் உடைந்த ஏஞ்சல் கடந்த இரு தினங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏஞ்சலின் உறவினர்கள், கொட்டாரம் சந்திப்பில் நின்று கொண்டிருந்த ஆண்டனிராஜை வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்துச் சென்று, ‘உன்னால் ஓர் உயிர் போய் விட்டது’ எனக் கூறி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஆண்டனிராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இளம் பெண் தற்கொலை மற்றும் ஆண்டனிராஜ் கொலை குறித்து தகவலின்பேரில் கன்னியாகுமரி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை மற்றும் கொலை தொடர்பாகத் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.
ஆண்டனி ராஜ் கொலை தொடர்பாக, ஏஞ்சலின் உறவினர்கள் பெவின் (26), பெனிஸ் (25), வினிஸ் (25) மற்றும் பெரியவிளையைச் சேர்ந்த ரவி செல்வன் (56), ஏசுநேசசெல்வன் (58) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆண்டனிராஜ் மீது அஞ்சுகிராமம், பழவூர், கன்னியாகுமரி, திருக்குறுங்குடி, ஏர்வாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்பட 11 வழக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஏஞ்சலைப் பின்தொடர்ந்து காதலிப்பதாக ஆண்டனி ராஜ் தொல்லை கொடுத்தது குறித்து, அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தனது மகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என ஏஞ்சலின் தந்தை பலமுறை சொல்லியுள்ளார். ஆனாலும் ஏஞ்சலைப் பின்தொடர்வதை ஆண்டனி ராஜ் விடவில்லை. இதையடுத்து ஆண்டனி ராஜிக்கு எச்சரிக்கையும் விடுத்து பார்த்துள்ளனர். ஆனாலும் ஆண்டனி ராஜ் கேட்காமல், ஏஞ்சலின் குடும்பத்தினரை மிரட்டி உள்ளார். இந்தப் பிரச்னையால் மனம் நொந்த ஏஞ்சல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏஞ்சல் மரணத்துக்கு ஆண்டனி ராஜின் ஒருதலைக் காதல்தான் காரணம் என நினைத்து, உறவினர்கள் தாக்கிக் கொலை செய்துள்ளதும் போலீஸ் விசாரணைக்குப் பிறகே தெரியவந்துள்ளது.