குமரி லாக்கப் மரணம்: "சாத்தான்குளம் வழக்கைப் போன்று உள்ளது" – மாற்றுத்திறனாளியின் உறவினர்கள் ஆவேசம்

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரி வர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டுக்கு அருகில் கடை வைத்திருந்தார்.

இவர் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றதாக கடந்த 9-ம் தேதி, தென்தாமரைக் குளம் போலீஸார் சோதனை நடத்தி கடையில் இருந்து குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து சபரிவர்மனைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் சிறையில்  விசாரணைக் கைதியாக அடைத்தனர்.

இதற்கிடையே இன்று (ஜூலை 13) காலை சிறையில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சபரி வர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதற்கிடையே சபரி வர்மனின் உடலைப் பார்த்த உறவினர்கள் உடலில் காயம் உள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளனர். 

இது குறித்து சபரி வர்மனின் உறவினர் விநாயக மூர்த்தி கூறுகையில், “சபரிவர்மன் மாற்றுத்திறனாளி. அவரது உடல் முழுவதும் அடித்த காயங்கள் உள்ளன. உடல் பகுதிகள் சிவந்திருக்கிறது. அவரது முகம் மிகவும் கறுத்துப்போய் உள்ளது.

உறவினர்கள் மறியல்
உறவினர்கள் மறியல்

முதுகில் இருந்து கீழ் பகுதி வரை காயம் உள்ளது. அவர் கீழே விழுந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லுகிறார்கள். அவர் மாற்றுத்திறனாளி உழைத்து பெற்றோரையும், மனைவியையும் குழந்தையையும் கவனித்து வந்தார். இப்போது அவர்களது குடும்பம் ஆதரவு இல்லாமல் நிற்கிறது.

குடும்பத்தினர் தினமும் சாப்பிடவே வழி இல்லாமல் உள்ளனர். சிறையில் இருந்து அவரை அழைத்து வரும்போது இறந்ததாகக் கூறுகிறார்கள் அவரை சிறையில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தார்களா இல்லை நடக்க வைத்து அழைத்து வந்தார்கள் என்பதை போலீசார் விளக்க வேண்டும்” என்றார்.

லாக்கப் மரணத்தை கண்டித்து போராட்டம்
லாக்கப் மரணத்தை கண்டித்து போராட்டம்

சபரி வர்மனின் உடலை பார்த்த உறவினரான மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “வியாழக்கிழமை காலையில் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை அடித்த காயங்கள் உடல் முழுவதும் உள்ளன. காவல்துறையினர் வேண்டுமென்றே சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.

அவரது உடலை வாங்க வேண்டும் என்றால், அடித்தவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது சாத்தான்குளம் வழக்கைப் போன்று உள்ளது. அவரை அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர். கஞ்சா வழக்கு பல இடங்கள் நடக்கிறது.

அதற்காக அடித்துக் கொலை செய்ய வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. இவரை அடித்து கொலை செய்தவரைக் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றார்.

சபரி வர்மனை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *