சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தவெக அரசுக்கு தங்கள் கூட்டணியில் நின்ற கட்சிகள் ஆதரவளித்ததை திமுகவினரால் ஏற்கமுடியவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது தவெக. அக்கட்சிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனை ஆ.ராசா விமர்சித்ததும் பேசு பொருளானது. இதே போல் திமுக-வினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜஹான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ஆடுதுறையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் திமுக அமைச்சரான எம்.எல்.ஏ கோவி.செழியன், முன்னாள் எம்.பி ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தற்கு எதிராக மற்றொரு தரப்பு திமுக-வினர் பதிவிட்டு வருவது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.