புத்தகங்கள் நம் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கு உற்ற துணைபுரிகிறது. இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கின்றனர். வாசிப்பினை ஊக்குவித்தும் வருகின்றனர். அவ்வாறு குழந்தைகளின் வாசிப்புலகத்தை பரவாலக்க நெல்லை காந்திநகரில் சிறாருக்கென `டோமாயி” என்ற சிறார் நூலகத்தை அமைத்து குழந்தைகளை வாசிப்புலகத்திற்கு புகுத்துகிறார்கள் பிரியதர்ஷினி – யுவராஜ் தம்பதியர்.

ஆவலோடு நூலகத்திற்குச் சென்று பிரியதர்ஷினியுடன் உரையாடத் தொடங்கினோம்,
” நான் இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நிதியாளராகப் பணியாற்றுகிறேன். என் கணவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உளவியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘டோட்டாசான்’ என்ற புத்தகம் வாயிலாக டோமாயி பள்ளி பற்றி அறிந்தேன். குழந்தைகள் விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் படிக்கின்ற சுதந்திரத்தை அப்புத்தகம் வாயிலாக அறிந்தேன். டோமாயி பள்ளியை நடத்த சாத்தியம் இல்லை என்று உணர்ந்தபோது குழந்தைகளுக்கு டோமாயி நூலகம் போல் சிறுவெளி அமைத்துத் தர நினைத்தோம். எனவே நூலகத்திற்கு `டோமாயி’ என்று பெயரிட்டோம். 2022இல் ஏப்ரல் மாதம் வல்லவன்கோட்டை என்கிற கிராமத்தில் அமைத்தோம். பிறகு 2024 செப்டம்பர் மாதம் காந்திநகரில் அந்நூலகத்தை மாற்றியமைத்தோம். நான் ராணி அண்ணா கல்லூரியிலும், என் கணவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருவதாலும், எங்களின் மகள் காந்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிப்பதாலும் அவளின் பள்ளி தோழர்களுக்கு ஏற்ற இடமாக காந்தி நகர் இருந்தது. அதனால் இந்தப் பகுதியைத் தேர்வு செய்தோம். வல்லவன்கோட்டை நூலகத்தைப் பராமரிப்பதற்கு சரியான நபர்கள் கிடைக்கவில்லை.”
அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக டியூஷனும் நடத்தி வருகிறீர்களாமே?
” ஆமாம். ஆரம்பத்தில் இந்நூலகத்தை டியூஷனாக மாற்றிவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் கட்டணம் என்பது சவாலான ஒன்று. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர்களுக்கு டியூஷன் இருப்பதால் அவர்களால் முழுமையாக இந்நூலகத்தில் வாசிப்பில் ஈடுபட முடியவில்லை என்பதால் நாம் ஒரு டியூஷன் நடத்தினால் மாணவர்கள் அங்கேயே வாசிப்பதற்கான வாய்ப்பையும் பெறலாம் என்றே டியூஷன் நடத்த தொடங்கினோம். ஆசிரியர் ஒருவரையும் நியமித்து உள்ளோம். ஆனால் மக்கள் இலவசம் என்பதால் தரமற்றதாக இருக்குமோ என்று எண்ணுகிறார்கள். அதனால் மாணவர்களின் வருகையும் குறைவாக இருக்கிறது. தற்போது எங்கள் டியூஷன் சென்டரில் ஆறு மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.”
புத்தகங்களாலான கொலு:
“நானும் என் கணவரும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறோம். அந்த சங்கத்தில் கூறப்படுகின்ற புது சிறார் புத்தகங்களையெல்லாம் குறித்து நூலகத்தில் வாங்கி வைப்போம். ஆரம்பத்தில் என் நண்பர்கள் சிலர் ரூ.500, 1000ரூபாய் நூலகம் அமைப்பதற்கு தந்தார்கள். பிறகு நாங்கள் மாதம் மூன்று புத்தகங்களையாவது நூலகத்திற்காக வாங்கிவிடுவோம். தற்போது எங்கள் நூலகத்தில் 1500 புத்தகங்கள் வரை இருக்கின்றன. கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் நாங்கள் புத்தகங்களைக் கொண்டு எங்கள் நூலகத்தில் கொலு அமைத்தோம். மாணவர்கள் விரும்பி வந்து சிறார் பாடல்கள் பாடினார்கள். ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தலைப்பிலும் புத்தகங்களைக் கொண்டு கொலு அமைத்தோம். மாணவர்களும் விரும்பி வாசித்தார்கள். இவ்வாறு என் மகள் 7 வயதில் ஒரு முறை நாளிதழைப் பார்த்து, “அம்மா இவர்கள் பொம்மைகளால் கொலு வைத்திருக்கிறார்கள்” என்றாள். அவள் இதுவரை கண்டது புத்தகங்களாலான கொலுவையே பார்த்திருக்கிறாள். எனவே அவள் பொம்மைகளுடனான கொலுவைப் பார்த்து ஆச்சரியமாக என்னிடம் கேட்டது ஒரு விதத்தில் மகிழ்ச்சி தந்தது. என்னுடைய ஆசை என் மகள் போல் ஒவ்வொரு குழந்தையும் புத்தகங்களோடு பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும். அப்போது வீட்டிலேயே ஒரு நூலகம் உருவாகிவிடும்.”
” நூலகம் தொடங்கப்பட்டபோது ஒரு சில நண்பர்கள் தங்களால் இயன்ற தொகையினை வழங்கி புத்தகம் வாங்குவதற்கு உதவினர். பின்னர் ஓரிருவர் தங்கள் வீட்டில் யாருக்கேனும் பிறந்தநாள் வரும்போது ஓரிரு புத்தகங்களை நூலகத்திற்குப் பரிசாக வழங்குவார்கள். சிலர் பழைய புத்தகங்களை அளித்துள்ளனர். அவற்றில் நூலகத்திற்குத் தேவையானதை மட்டும் கண்டறிந்து பயன்படுத்தி வருகிறோம். இங்கு வரும் குழந்தைகளை புத்தகத் திருவிழாக்கள், நூலகங்கள், சிறார் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை அழைத்துச் செல்கிறோம். எந்த நிகழ்வுக்கும் குழந்தைகளிடம் எந்தவொரு கட்டணமும் வாங்கப்படுவதில்லை. புத்தகத்திருவிழாவிற்குச் செல்லும்போதும் குழந்தைகளிடம் ஒரு தொகையினை வழங்கி அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவதற்கு ஊக்கப்படுத்திகிறோம். இதனைத் தெரிந்துகொண்ட புஷ்பலதா பள்ளியின் தாளாளர் இருமுறை புத்தகங்கள் வாங்க குழந்தைகளுக்கு பண உதவி புரிந்தார். மேலும் அவர்களின் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள புத்தகங்களை எங்கள் நூலகத்திற்கும் வழங்கினார். குழந்தைகளின் வருகை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை ஏதேனும் ஒரு குழந்தை வாசித்தால் போதும் என்ற எண்ணத்திலே தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். என்றார் மனநிறைவாக..