கூடுவாஞ்சேரி: ஒரு மாத வித்தியாசம்; ஆறு மாதப் போராட்டம் – ஆதார் பிழையால் தவிக்கும் மாணவி!

Spread the love

“ஒரு மாத வித்தியாசம் தான், இதை சரிசெய்ய இவ்வளவு சிரமப்படுவோம்னு நினைக்கவே இல்லை!” என்கிறார் அந்த 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவியின் தாய்.

கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி, 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு, தற்போது அரசு பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வருகிறார். அம்மாணவியின் சிறுவயதில் தனியார் பள்ளி மூலம் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தபோது, பிறந்த தேதியில் ஒரு மாத வித்தியாசம் ( அக்டோபருக்கு பதில் நவம்பர்) ஏற்பட்டிருக்கிறது. தற்போது பிறப்புச் சான்றிதழில் ஒரு தேதியும், ஆதாரில் வேறு தேதியும் இருப்பதால் பள்ளியில் மாணவியின் விவரங்களைப் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றுவதற்காக ஆன்லைனில் பத்து முறைக்கும் மேல் விண்ணப்பித்தும் அவையனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக மாணவியின் தாயார் கூறுகிறார். மேலும் இதுகுறித்து ஆதார் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் சென்று விசாரித்தபோது போது, இனிமேல் தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால் ஆதார் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அம்மைய அதிகாரிகள் எச்சரித்ததாகக் கூறுகிறார்.

பின்னர் இது தொடர்பான அலுவலகத்தில் விசாரித்தபோது, மாணவி பிறந்த மருத்துவமனையின் பிறப்புச் சான்றிதழில் இருக்கும் QR Code தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவி பிறந்த ஆண்டான 2013-ல் அந்த மருத்துவமனையில் QR Code நடைமுறையில் இல்லை. 2017-ம் ஆண்டில்தான் அந்த முறை வழக்கத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதே மருத்துவமனையில் 2018-ம் ஆண்டில் பிறந்த மாணவியின் தங்கைக்கு QR Code வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் கேட்டபோது, உரிய அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லாததால் எந்த மாற்றமும் செய்ய இயலாது எனவும் இதனால் QR Code ம் வழங்க முடியாது எனவும் கூறப்பட்டதாகச் சொல்கிறார் தாய்.

கடந்த ஆறு மாதங்களாக பள்ளி, மருத்துவமனை, ஆதார் அலுவலகம், தலைமை அலுவலகம் என அனைத்திலும் தேடி அலைந்தும் தீர்வு கிடைக்காத நிலையில், இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்திருக்கிறார்.

இதற்கிடையில், ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றுவதற்காக இரண்டு முறைக்கு மேல் முயற்சி செய்தும் மாறாமல் இருந்தால், அதன் பிறகு பெங்களூருக்குச் சென்றுதான் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தங்களால் பெங்களூருக்குச் சென்று இதற்காக செலவுகள் செய்து திருத்தம் செய்வது சாத்தியமில்லை என்கிறார் தாய்.

“அப்படியென்றால், எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பங்கள் இதுபோன்ற ஆவணச் சிக்கல்களை எப்படி சரிசெய்வது?” என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.

“அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் என் மகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க, இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுக் கிடைக்க வேண்டும்” என்பதுதான் அந்தத் தாயின் கோரிக்கையாக உள்ளது.!

சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் தலையிட்டு, மாணவிக்கு உரிய தீர்வு காண வேண்டும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *