அதைத் தொடர்ந்து, நிதின் ராஜ் ஆக்ஷன் கவுன்சில் மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் இணைந்து கடைகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற பொது சேவைகளைத் திட்டமிட்டு, அமைதியான முறையில் முழுமையாக முடக்கும் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். நிதின் ராஜ் ஆக்ஷன் கவுன்சில் அமைப்பின் கோரிக்கையாக, நிதின் ராஜின் குடும்பத்திற்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாட்டைத் தடுக்க “ரோகித் வெமுலா சட்டம்’ அமல்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அஞ்சரக்கண்டி பல் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை நீதித்துறை மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த ஹர்த்தால் போராட்டம் காரணமாக கேரளாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கேரள அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இன்று நடைபெறும் வி.ஐ.டி (VIT) நுழைவுத் தேர்வெழுதச் சென்ற மாணவர்கள், போக்குவரத்து தடையால் தேர்வு மையங்களுக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அத்தியாவசியச் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், போக்குவரத்து வசதி இல்லாததால் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
நிதின் ராஜின் மரணத்திற்குப் பின்னால் உள்ள சாதிய ஒடுக்குமுறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.